போத்தனுார் - ஈரோடு ரயில் பாதையில் ரூ.144.96 கோடியில் தானியங்கி சிக்னல்
கோவை:போத்தனுார் - ஈரோடு ரயில் பாதையில், அதிகளவு ரயில்கள் சென்று வருவதால், போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, கூடுதல் ரயில்கள் இயக்குவதில் சிக்கல் இருந்து வருகிறது. எதிர்காலத்தில் ரயில் போக்குவரத்து, 125 சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக, தெற்கு ரயில்வே கணித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு, 107 கி.மீ., துாரம் கொண்ட இந்த ரயில் பாதையில், தானியங்கி பிளாக் சிக்னலிங் (ஏ.பி.எஸ்.,) அமைக்க, ரயில்வே அமைச்சகத்துக்கு, தெற்கு ரயில்வே கோரியது. அதையேற்று, ரூ.144.96 கோடியிலான இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், 'அதிக போக்குவரத்து கொண்ட இப்பாதையில், நெரிசலை குறைக்க ஏ.பி.எஸ்., அமைப்பு முக்கியமானது. இது ஒரே திசையில் இயங்கும், இரு ரயில்களுக்கு இடையிலான துாரத்தை குறைத்து, பாதையின் சில பகுதிகளை தானாகவே தடுத்து, பாதுகாப்பான இடைவெளிகளை உறுதி செய்கிறது. ஒரு லோகோ பைலட், அபாய சமிக்ஞையை கடந்து சென்றால், இவ்வமைப்பு மின்சாரத்தை துண்டித்து ரயிலை நிறுத்துகிறது. இது, பாதுகாப்பை மேலும் பலப்படுத்துகிறது. தற்போது, அதிக நெரிசல் கொண்ட, 199 கி.மீ., துாரமுள்ள சென்னை - ஜோலார்பேட்டை பிரிவில் மட்டும் ஏ.பி.எஸ்., அமைப்பு செயல்படுகிறது' என்றனர்.
'பிளாக் சிக்னலிங்' என்றால் என்ன?
தானியங்கி பிளாக் சிக்னலிங் முறை (ஏ.பி.எஸ்.,) என்பது, ரயில் பாதையை பல பிரிவுகளாகப் பிரித்து, ரயில்களின் இயக்கத்தை தானாகவே கட்டுப்படுத்தும் அமைப்பு. இது, டிராக் சர்க்யூட்கள் அல்லது ஆக்சில் கவுன்ட்டர்கள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, ரயில்கள் பாதுகாப்பாகவும், மோதல்கள் இன்றியும், ஒன்றையொன்று பின்தொடர்ந்து செல்ல உதவுகிறது. நேரத்தை சேமித்து, ரயில்களின் சரியான நேரத்தை மேம்படுத்துகிறது. வழித்தடத்தின் திறனை அதிகரிக்கிறது.