உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் ! பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு

 பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் ! பள்ளி மாணவர்களிடையே விழிப்புணர்வு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 94 அரசு பள்ளிகளில், 'ஸ்வச் பாரத்' இயக்கத்தின் கீழ், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. பொள்ளாச்சியில், 'ஸ்வச் பாரத்' இயக்கத்தின் ஒரு பகுதியாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மற்றும் சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி சார்பில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லுாரி மாணவர்கள், தலா, 10 பேர் வீதம், ஐந்து குழுக்களாக பிரிந்து, பள்ளிகள்தோறும் நேரடியாகச் சென்று, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட, 94 அரசு பள்ளிகளில், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள், அவற்றால் சுற்றுச்சூழலில் ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், வீடுகளில் இருந்து குப்பையை வகை பிரிப்பதும், மக்கும், மக்காத குப்பை குறித்தும் விளக்கப்பட்டது. பி.டி.ஓ., சதீஷ் தலைமையிலான ஒன்றிய அதிகாரிகள் இதற்கான நட வடிக்கை மேற்கொண்டனர். அதிகாரிகள் கூறியதாவது: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகள், பெரிய அச்சுறுத்தலாக உள்ளது. எந்த கடைக்குச் சென்றாலும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகம் காணப்படுகிறது. மாணவர்களின் மனதில் பிளாஸ்டிக் குறித்த விழிப்புணர்வை விதைத்தால், மண்ணில் பிளாஸ்டிக் இருக்காது. அதற்காகவே, பள்ளிகள்தோறும் பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமை குறித்தும், அதற்கு மாற்றாக துணி மற்றும் காகித பைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும், மகாத்மா காந்தியின் எண்ணத்தை நிறைவேற்றும் வகையில், 'மரங்கள் வளர்த்து இயற்கையைப் பாதுகாப்போம், நெகிழி பயன்பாட்டை தவிர்ப்போம்' என, மாணவர்கள் உறுதி மொழியும் ஏற்றுக் கொண்டனர். இதேபோல, தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகளிலும், பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ