கிக் தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு! நலவாரியத்தில் பதிய அழைப்பு
மேட்டுப்பாளையம் : உணவு மற்றும் வார்த்தக சேவை டெலிவரி செய்யும் இணையம் சார்ந்த 'கிக்' தொழிலாளர்களுக்கு நல வாரியத்தில் கல்வி, திருமணம், இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் கிடைக்கிறது. கோவை மாவட்டத்தில் 'கிக்' தொழிலாளர்களை, தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் நேரில் சென்று சந்தித்து நலவாரியத்தில் பதிவு செய்ய விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.உணவு மற்றும் அன்றாட வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை பெரும்பாலான மக்கள் நேரில் சென்று வாங்குவதை விட, தற்போது ஆன்லைன் வாயிலாக ஆர்டர் செய்து வாங்கி வருகின்றனர். இதன் காரணமாக இணையவழி விற்பனை, வர்த்தக சேவை விற்பனை தொழில் மிகவும் வேகமாக வளர்ந்து வருகிறது.இந்த வகையான இணையதளம் சார்ந்த நிறுவனங்களில், வேலை செய்யும் தொழிலாளர்களில் குறிப்பாக டெலிவரி செய்யும் அமைப்புசாரா தொழிலாளர்கள் 'கிக்' தொழிலாளர்கள் என அழைக்கப்படுகின்றனர். இவ்வகையான 'கிக்' தொழிலாளர்கள் அனைத்து வகை வயதிலும் உள்ளனர். நன்கு படித்த பட்டதாரிகள் இத்தொழிலில் உள்ளனர். இதில் பலர் பகுதி நேரமாகவும் பணி புரிந்து வருகின்றனர். மழை, வெயில், நேரம், காலம் இன்றி பணிபுரியும் 'கிக்' தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில், தனி நலவாரியம் அமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்து வந்தது. இதையடுத்து, தமிழக அரசால் கடந்த 2023ம் ஆண்டு 'கிக்' தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டது.இதன்படி இணையதளம் சார்ந்த தொழில்களில் பணிபுரியும் கிக் தொழிலாளர்கள், தற்போது தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியத்தில் பதிவு செய்து பயனடையலாம்.இதுகுறித்து, கோவை தொழிலாளர் உதவி கமிஷனர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாலதண்டாயுதம் தெரிவித்ததாவது:-கோவை மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் இணையம் சார்ந்த அமைப்புசாரா 'கிக்' தொழிலாளர்களைப் பதிவு செய்ய சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இவ்வாரியத்தில் 18 வயது முதல் 60 வயது வரையிலான தொழிலாளர்கள் இணையலாம். இதுவரை 200க்கும் மேற்பட்டோர் நலவாரியத்தில் இணைந்துள்ளனர்.கோவை ராமநாதபுரத்தில் உள்ள தொழிலாளர் அலுவலகத்தில் வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை இந்த முகாம் நடைபெறவுள்ளது. பதிவு செய்யும் தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம். இயற்கை மரணம் மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.மேலும் கட்டுமான தொழில்புரியும் வெளிமாநில தொழிலாளர்களும் தங்களை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவுசெய்து பயன்பெறலாம். இதுதொடர்பாக உணவு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவற்றுக்கு அலுவலர்கள் நேரில் சென்று 'கிக்' தொழிலாளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.