கோடை காலத்தில் பறவைகளுக்கு தண்ணீர் வைக்க விழிப்புணர்வு
பெ.நா.பாளையம்: உலக சிட்டுக்குருவிகள் தினத்தையொட்டி, பெரியநாயக்கன்பாளையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள தேசிய மனித மேம்பாட்டு மையம் மற்றும் ரோட்டரி சமுதாய குழுவும் இணைந்து, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. இம்மையத்தில் நேற்று சிட்டுக்குருவிகளை காப்பது வாயிலாக, இயற்கையை வளமாக்க சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதில், இயற்கையை பாதுகாக்கும் வகையில், 'இயற்கையும், உயிரினங்களும்' என்ற தலைப்பில் பயிற்சியாளர்கள் இடையே விவாத மேடை அமைக்கப்பட்டு, கருத்துகள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. 'இயற்கையின் பாதுகாப்பில், நமது பங்கு' என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி நடந்தது. தொடர்ந்து, சிட்டுக்குருவிகள் மற்றும் அனைத்து வகையான பறவை இனங்களுக்கு தற்போது நிலவும் கோடை வெயில் காலத்தில் தண்ணீர் வைக்கும் பழக்கத்தை அனைவரும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என, விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அனைத்து உயிர்களையும் வளர்த்தல், அவர்களிடையே கருணை காட்டுதல், பாதுகாத்தல் ஆகியவை குறித்து பயிற்சியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.நிகழ்ச்சி ஏற்பாடுகளை இம்மையத்தின் இயக்குனர் சகாதேவன் செய்து இருந்தார்.