உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / களைகட்டியது ஆயுதபூஜை விற்பனை; பூ, பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்

களைகட்டியது ஆயுதபூஜை விற்பனை; பூ, பொருட்கள் வாங்க மக்கள் ஆர்வம்

கோவை: சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு வீடுகள், அலுவலகங்கள், தொழிற்கூடங்கள், வர்த்தக நிறுவனங்களில் நடக்கும் வழிபாடுகளுக்கும் தேவையான பொருட்களின் விற்பனை நேற்று அமோகமாக இருந்தது.பொதுமக்களும் தொழிலாளர்களும் பூஜைகளுக்கு தேவையான பொருட்களை ஆர்வத்துடன் வாங்கிசென்றதால் பூமார்க்கெட், டி.கே.மார்க்கெட், ராஜவீதி, ஒப்பணக்காரவீதி பகுதிகள் விழாக்கோலம் பூண்டிருந்தது. விற்பனையும் பரபரப்பாக இருந்தது.அரசு மற்றும் பல தனியார் அலுவலகங்களில் நேற்றே ஆயுதபூஜை கொண்டாடப்பட்டது. அலுவலகங்களில் அலங்கார தோரணங்கள் கட்டப்பட்டு ஊழியர்களுக்கு சிறு சிறு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.சிறப்பாக பணிபுரிந்த பணியாளர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.கோவை பூமார்க்கெட்டில் சரஸ்வதிபூஜை, விஜய தசமியை ஒட்டி பூக்கள் விற்பனை அமோகமாக இருந்தது.செவ்வந்திப்பூ கிலோ, 500 ரூபாய் முதல், 700 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்றாற் போல் விற்பனையானது. மல்லிகை பூ கிலோ 1,000 ரூபாய்க்கும், ஜாதி மற்றும் முல்லை ஆகியவை கிலோ 800 ரூபாய்க்கும் விற்றது.ரோஜா, சம்பங்கி, துளசி, கோழிகொண்டை உள்ளிட்டவை வழக்கமாக விற்பனையாகும் விலையிலேயே விற்றது. தென்னை இலைகளில் தோரணங்களும், கலர் பேப்பர்களில் அலங்கார தோரணங்களும் விற்பனையானது. இது தவிர ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, சாத்துக்கொடி, மாதுளை, திராட்சை, பேரிக்காய், வாழைப்பழங்கள், வாழை கன்று, கரும்பு ஆகியவைவிற்பனையானது.பெரும்பாலான வர்த்தகர்கள் பூசணிக்காய், வாழைக்கன்றுகள், வாழைஇலை, பொரி, கடலை, ஆரஞ்சு மிட்டாய்களையும், ஸ்வீட் ஸ்டால்களில் பாரம்பரிய இனிப்பு வகைகளையும் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.ஆயுதபூஜை விஜயதசமியை ஒட்டி ஏராளமானோர் சொந்தஊர்களுக்கு செல்ல பஸ்ஸ்டாண்டிற்கு திரண்டதால், காந்திபுரம், சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டுகளில் வெளியூர் செல்வோர் நிரம்பிஇருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ