சாலையோரத்தில் குப்பை குவிப்பு பேக்கரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, சாலையோரம் குப்பையை குவித்த பேக்கரி உரிமையாளருக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, எச்சரிக்கை விடுக்கப்பட்டது.பொள்ளாச்சி - உடுமலை இடையிலான ரோட்டில், நாளுக்கு நாள் பேக்கரி, உணவகங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு சேகரமாகும் குப்பைகள் மற்றும் மீதமான உணவு, இறைச்சிக் கழிவுகள், மூட்டையாக கட்டி சாலையோரம் குவிப்பதை சிலர் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.இது தொடர்பாக, கிராம மக்கள் புகார் தெரிவித்தும் வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, நேற்று, பொள்ளாச்சி தாசில்தார் வாசுதேவன் தலைமையில் வருவாய் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர், பேக்கரிகளில் ஆய்வு நடத்தினர்.அப்போது, கோமங்கலம்புதுார் சர்வீஸ் ரோடு ஒட்டிய பேக்கரியில் சேகரமாகும் குப்பைகள், கெடிமேடு பகுதியில் மூட்டை மூட்டையாக கொட்டி இருப்பதை கண்டறிந்தனர். பேக்கரியை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதையடுத்து, கொட்டிய குப்பையை பேக்கரி நிர்வாகத்தினரே அகற்ற ஒப்புதல் அளித்தனர். தொடர்ந்து, குப்பை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. அதன்பேரில், பேக்கரி உரிமையாளருக்கு, 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.தாசில்தார் வாசுதேவன் கூறுகையில், ''பேக்கரிகளில் சேகரமாகும் குப்பைகளை, அவரவரே முறையாக அப்புறப்படுத்த வேண்டும். மாறாக, பொது இடங்கள், சாலைகள், காலி மனைகள், நீர்நிலைகளில் குப்பையைக் கொட்டக் கூடாது. தொடரும் பட்சத்தில் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.