உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ரயில்வேயில் அடிப்படை வசதி; தென்னக ரயில்வேக்கு கோரிக்கை

 ரயில்வேயில் அடிப்படை வசதி; தென்னக ரயில்வேக்கு கோரிக்கை

கோவை: ரயில்வேயில் அடிப்படை வசதி ஏற்படுத்த, கோவை 'சிட்டிசன்ஸ் வாய்ஸ் கோயம்புத்தூர்' என்ற தன்னார்வ நுகர்வோர் அமைப்பு சார்பில், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர். கோவை, பொள்ளாச்சி, மதுரை வழியாக நேரடியாக, தூத்துக்குடி மற்றும் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவைகளை மீண்டும் இயக்க வேண்டும். ராமேஸ்வரத்திற்கான இரவு நேர ரயில் சேவையை புதுப்பிக்க வேண்டும். போத்தனூர் மற்றும் வடகோவை ரயில்வே ஸ்டேஷன்களில், உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை. போத்தனூரில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களின் மேற்கூரைகள் மழையின் போது ஒழுகுவது, மோசமான கட்டுமான தரத்தை காட்டுவதோடு, ரயில் பயணிகளுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது. சென்னை, மும்பை மற்றும் திருச்சி செல்லும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்களுக்கு போத்தனூரை முனையமாக மேம்படுத்த வேண்டும். இந்த ரயில்கள் கோவை சந்திப்பு வழியாக இயக்க வேண்டும். போத்தனூர் ரயில் நிலைய உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு, 350 கோடி ரூபாய் செலவிடப்படுவதாக தெரியவருகிறது. இருப்பினும், இவ்வசதிகள் அவற்றின் முழு திறனுக்கேற்ப பயன்படுத்தப்படுவதில்லை. போத்தனுார், ரயில்வே ஸ்டேஷன் கவுன்டர்களில் நான்கு ஊழியர்கள் பணியில் இருந்தும், ஒருவர் மட்டுமே விசாரணை மற்றும் தட்கல் முன்பதிவை கையாளுகிறார். பயணிகளின் நெரிசலை குறைக்க, தட்கல் நேரங்களில் கூடுதல் கவுன்டர் திறக்க வேண்டும். கோவை, போத்தனூர், வடகோவையில் வைக்கப்பட்டிருந்த தொடுதிரை தகவல் இயந்திரங்களை தற்போது காணவில்லை. அவற்றை உடனடியாக மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். சதாப்தி மற்றும் வந்தே பாரத் ரயில்களை தவிர, மற்ற அனைத்து விரைவு ரயில்களிலும், கழிவறைகளின் சுகாதாரம் மோசமாக உள்ளது. நாளொன்றுக்கு சுமார், 38,000 பயணிகளை கையாளும், இந்தியாவின் அதிக வருவாய் ஈட்டும் நிலையங்களில் ஒன்றாக திகழும், கோவை பகுதி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, கோரிக்கை மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை