உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / காட்சிப்பொருளான பேட்டரி வாகனங்கள்: லைசென்ஸ் இல்லாததால் சிக்கல்

காட்சிப்பொருளான பேட்டரி வாகனங்கள்: லைசென்ஸ் இல்லாததால் சிக்கல்

பொள்ளாச்சி; தமிழகத்தில், துாய்மை பாரத இயக்கம், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், கிராமங்களில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கப்படுகின்றன. இந்த பேட்டரி வாகனங்கள், மத்திய அரசு, 70 சதவீதம், மாநில அரசு, 30 சதவீதம் என, 2.5 லட்சம் மதிப்பீட்டில், அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலு வலகங்களுக்கு தருவிக்கப் படுகின்றன. அதன்பின், 350 வீடுகளுக்கு ஒரு பேட்டரி வாகனம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த வாகனத்தை இயக்க, இலகுரக மோட்டார் வாகன உரிமம் அவசியம். பெரும்பாலான ஊராட்சிகளில், துாய்மை காவலர்களாக பணி புரிபவர்கள், இலகு ரக வாகனம் ஓட்டுவதற்கான டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் உள்ளனர். சில துாய்மை காவலர்கள் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்து, வாகனத்தை இயக்க முன் வந்தாலும், மாதம், 5,000 ரூபாய் சம்பளம் என்பதால் பணியில் இருந்து விடுவித்து கொள்கின்றனர். மேலும், துாய்மைக் காவலர்களாக பணியில் உள்ள பெண்கள், பேட்டரி வாகனத்தை இயக்க அச்சம் கொள்கின்றனர். இதனால், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில், இந்த பேட்டரி வாகனங்கள், காட்சி பொருளாகவே உள்ளன. ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், 'ஊராட்சியில் பணியில் இருக்கும் துாய்மை காவலர்களே பேட்டரி வாகனத்தை இயக்க வேண்டும். அந்தந்த ஊராட்சியில் பணியில் இருக்கும் ஆண், பெண் துாய்மை காவலர்களை, இலகு ரக மோட்டார் வாகன உரிமம் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி