போஷான் டிராக்கர் ஆப் வாயிலாக சத்துமாவு வாங்கும் பயனாளிகள் பதிவு
பொள்ளாச்சி, : பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தில், 106 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு, கர்ப்பிணிகள், பள்ளி வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு கற்பித்தல், ஊட்டச்சத்து வழங்குதல் என, பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன.அவ்வகையில், கர்ப்பிணிகள், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நாள் ஒன்றுக்கு, 150 கிராம் வீதம் சத்துப் பொருட்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் அடங்கிய சத்துமாவை, 15 நாட்களுக்கு ஒருமுறை இம்மைய ஊழியர்கள் வழங்குகின்றனர்.இதனை பயனாளியின் மொபைல்போனில் ஓ.டி.பி., பெற்று பதிவு செய்கின்றனர். இந்நிலையில், இம்மாதம் முதல் பயனாளிகளின் முகம், 'போஷான் டிராக்கர் ஆப்' வாயிலாக பதிவு செய்து, சத்துமாவு வழங்கப்படவும் உள்ளது.குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீணா கூறியதாவது:கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு, மாதந்தோறும், இரு தவணையாக, 8 அரை கிலோ பாக்கெட் சத்தமாவு வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, 900 பயனாளிகள் பயனடைகின்றனர்.அதன்படி, சத்துமாவு பெறும் பயனாளிகள் முகம், 'டிராக்கர் ஆப்' வாயிலாக பதிவு செய்யப்படவுள்ளது. அதேநேரம், பதிவு சம்பந்தப்பட்ட கர்ப்பிணிகள், பாலுாட்டும் தாய்மார்கள், குழந்தைகள் வர முடியவில்லை என்றாலும், அவர்களின் குடும்பத்தை சார்ந்தவர்களிடம் சத்துமாவு வழங்கப்படும். இவ்வாறு, கூறினார்.