வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நக்கினா நாய்க்குதான் ஊசி போடணும்.
கோவை : நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், நாய் கடித்தால் மருத்துவமனையில் உரிய சிகிச்சை பெற வேண்டும். செல்லப்பிராணிகளின் எச்சிலில் கூட, ரேபிஸ் கிருமிகள் இருக்கலாம் என்பதால், செல்லப்பிராணிகள் வளர்ப்போர் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என, கால்நடை மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.கோவையை சேர்ந்த அந்த 23 வயது பெண்ணுக்கு, நாய்கள் என்றால் அவ்வளவு உயிர். வீட்டில் நான்கு குட்டிகளை வளர்த்துள்ளார். இது தவிர, தெருநாய்களுக்கும் உணவளிக்கும் பழக்கம் இருந்தது. இரக்கப்பட்டு அவர் நாய்களுக்கு உணவளித்ததே, அவரது உயிருக்கு உலையாகிவிட்டது.வழக்கம் போல் மூன்று மாதங்களுக்கு முன், தெருநாய்களுக்கு உணவளித்துள்ளார். அப்போது நாய்களுக்குள் சண்டை ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு நாய், இளம்பெண்ணை கடித்துள்ளது.ஆனாலும், அலட்சியமாக 'ரேபிஸ்' நோய்க்கான தடுப்பூசி போட, அவர் தவறிவிட்டார். இதனால் அவரை 'ரேபிஸ்' நோய் தாக்கி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சில நாட்களுக்கு முன் உயிரிழந்தார். டாக்டர்கள் எச்சரிக்கை
கோவையில் நடந்த இந்த சம்பவம், செல்லப்பிராணிகள் வளர்க்கும் பலரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதற்கேற்ப, வீட்டு நாய்க்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டிருந்தாலும், அவை கடித்தால் உடனடியாக டாக்டரிடம் பரிசோதனை செய்து, தடுப்பு மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்துகின்றனர்.கோவை, கால்நடை பராமரிப்புத் துறை, மண்டல இணை இயக்குனர் திருகுமரன் கூறியதாவது:நாய்க்கு ஆண்டுதோறும் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் நாய் கடித்தாலோ, பிராண்டினாலோ கட்டாயம், ரேபிஸ் தடுப்பூசி போட வேண்டும்.நாய், பூனை, ஆடு, மாடு உள்ளிட்ட வளர்ப்பு விலங்குகள் காட்டுப்பகுதிக்குச் செல்லும் போது வன விலங்குகள் கடித்தாலும், ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். வளர்ப்பு நாய்கள், குழந்தைகளையோ அல்லது வளர்ப்பவர்களையோ வாய், கண் உள்ளிட்ட பகுதிகளில் நக்குவதற்கு அனுமதிக்கக் கூடாது.நாயின் எச்சிலில், ரேபிஸ் கிருமி இருக்கும். அதன் வழியாக தொற்றுப் பரவும் அபாயம் உண்டு. தடுப்பூசிப் போட்டு பராமரித்து வரும் செல்லப் பிராணிகள், தெருநாய்களுடன் தொடர்பின்றி பார்த்துக் கொள்ள வேண்டும்.நாய்க்கு முறையாக தடுப்பூசி போட்டிருந்தாலும் கூட, அதற்கு ரேபிஸ்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி சரியாக தூண்டப்படாமல் இருக்கலாம். அதனால், அதனிடம் ரேபிஸ் வைரஸ் தொடர்ந்து வாழ்ந்து வரும். எனவே கவனம் தேவை.நாய்க்கடி, பூனைக்கடி நகக்கீறல் போன்றவற்றை சாதாரணமாகக் எடுத்துக்கொள்ளக் கூடாது. கடிபட்ட இடத்தில், 15 நிமிடங்கள் 'கார்பாலிக் சோப்' போட்டு, ஓடும் நீரில் நன்றாகத் தேய்த்துக் கழுவ வேண்டும். கடிகள் பலவகை!
கடித்த இடத்தில் ரத்தம் வந்தால், அது மூன்றாம் நிலை கடியாகும். இதற்கு ரேபிஸ் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இந்த தடுப்பூசியை, ஐந்து தவணைகள் கட்டாயம் போட்டுக் கொள்ள வேண்டும்.காயத்தின் தன்மை மோசமாக இருக்கும்பட்சத்தில், 'இம்யூனோகுளோபுளின்' எனும், உடனடி எதிர்ப்பு சக்தி மருந்தை, கடிபட்ட இடத்தில் ஊசியாக செலுத்த வேண்டும். ரத்தம் வராத கடிகள் இரண்டாம் வகை எனப்படும்.இதற்கு ரேபிஸ் தடுப்பூசி மட்டும் போதுமானது. அரசு மருத்துவமனைகளில், ரேபிஸ் தடுப்பூசி மற்றும் இம்யூனோகுளோபுளின் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. ரேபிஸ், 100 சதவீதம் உயிர்க்கொல்லி நோய் என்பதால், பொதுமக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
நக்கினா நாய்க்குதான் ஊசி போடணும்.