ஆராய்ச்சி மாணவர்களுக்கு ரூ.10 ஆயிரம் கண்டுகொள்ளாத பாரதியார் பல்கலை
கோவை : அரசு கல்லுாரி ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகை வழங்கத் தயாராக இல்லாத, பாரதியார் பல்கலை மீது, பேராசிரியர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பல்கலையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், முன்னாள் துணைவேந்தர் காளிராஜ், அரசு கல்லுாரிகளில் படிக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஆண்டுக்கு, ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவித்தார். ஆனால், இதுவரை பல்கலை தரப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. இதுகுறித்து, பல்கலை செனட் கூட்டத்தில் கேள்வி எழுப்பப்பட்டது. அரசு கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறுகையில், 'அரசு கல்லுாரி ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை தருவதாக அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் பேராசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இதுவரை செயல்படுத்தப்படவில்லை. செனட் கூட்டத்திற்கான, 'கேள்வி-பதில்' பிரிவில், இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது; பல்கலை தரப்பில் தமிழக அரசு ஆராய்ச்சி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவுள்ளதால் இத்திட்டம் தற்சமயம் நடைமுறையில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ள கூடியதாக இல்லை. தமிழக அரசு, ஆராய்ச்சி மாாணவர்களுக்கு தகுதி தேர்வுகள் வைத்து அதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மட்டுமே வழங்கும். பல்கலையின் திட்டத்திற்கும், தமிழக அரசின் அறிவிப்புக்கும், எவ்வித சம்மந்தமும் இல்லை' என்றார்.