பள்ளிக்கல்வி அலுவலகங்களில் பயோமெட்ரிக் முறை வேண்டும்
பொள்ளாச்சி, ; அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் கல்வித்துறை அலுவலகங்களில்,அலுவலர்களின் வருகையை கண்காணிக்க,'பயோமெட்ரிக்'முறை கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தற்போது, ஆசிரியர்கள் தங்களது வருகையை, 'எமிஸ்' தளத்தில் பதிவு செய்து வருகின்றனர். இதற்கென தனியாக நேரம் ஒதுக்க வேண்டியுள்ளது.பள்ளிகளில் நடைமுறையில் இருந்த பயோமெட்ரிக் முறை, கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு கைவிடப்பட்டது.மீண்டும் பயோமெட்ரிக் வருகைப் பதிவை அமல்படுத்தினால், வசதியாக இருக்கும் என்கின்றனர் ஆசிரியர்கள். கல்வித்துறை ஊழியர்கள் சிலர் கூறுகையில், 'பயோமெட்ரிக் முறை பயன்பாட்டில் இருந்தபோது சில நடைமுறை சிக்கல்கள் இருந்தன.'சர்வர்'கோளாறு, இன்டர்நெட் இணைப்பு பிரச்னைகளால், பல இடங்களில் இக்கருவி சரியாக வேலை செய்யவில்லை. கணினி ஆய்வகங்களை பராமரித்த தன்னார்வ நிறுவனத்துடனான ஒப்பந்தம் முடிவடைந்து, அது புதுப்பிக்கப்படாமல் இருந்ததால், இணையதள சேவையில் சிக்கல் எழுந்தது. மலைப்பகுதிகளில்உள்ள பள்ளிகளுக்கு, இணையதள இணைப்பு வழங்குவது பெரும் சவாலாக உள்ளது' என்றனர். பள்ளிகள் மட்டுமின்றி, கல்வி அலுவலகங்களிலும் பயோமெட்ரிக் வருகை பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அலுவலர்கள் குறித்த நேரத்தில் பணிக்கு வருவதையும், பணி நேரத்தில் சொந்த வேலைகளுக்காக வெளியே செல்வதையும் தவிர்க்க முடியும் என்றும், பணிகள் தேக்கமின்றி நடைபெறும் என்றும்,சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.