படகுசவாரி துவங்கவில்லை; சுற்றுலா பயணியர் ஏமாற்றம்
வால்பாறை; வால்பாறையில், படகு சவாரி துவங்கப்படாததால், வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.வால்பாறைக்கு வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்க, நகராட்சி சார்பில் படகுசவாரி துவங்கப்பட்டுள்ளது. படகு சவாரி செல்ல, 40 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.இந்நிலையில், படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரில் வீடு மற்றும் கடைகளில் இருந்து வெளியாகும் கழிவு நீர், பிளாஸ்டிக் பொருட்கள், குப்பை சங்கமிக்கின்றன.இதனால் கழிவு நீரில் சுற்றுலா பயணியர் படகு சவாரி செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.படகுஇல்லத்தில் தேங்கி நிற்கும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என, நகராட்சி நிர்வாகத்திற்கு உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.அதன் அடிப்படையில், கடந்த மாதம், படகு இல்லத்தில் தேக்கி வைக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்றப்பட்டது. ஆனால் இன்று வரை படகு இல்லத்தை சுத்தம் செய்து, மீண்டும் சுற்றுலாபயணியர் பயன்பாட்டிற்கு கொண்டுவரவில்லை. இதனால், படகு சவாரி செல்ல முடியாமல் சுற்றுலா பயணியர் ஏமாற்றமடைந்துள்ளனர்.இது குறித்து, நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'வால்பாறையில் தற்போது பருவமழை பெய்வதால், படகு இல்லம் துார்வாரும் பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. மழைக்கு பின் படகு இல்லம் துார்வாரப்படும். அதன்பின், புதியதாக மழை நீர் சேமிக்கப்பட்டு, படகுசவாரி துவங்கப்படும். மேலும் சேதமடைந்த நடைமேடையும் விரைவில் சரிசெய்யப்படும்,' என்றனர்.