குடிநீரை காய்ச்சி குடியுங்க! நகராட்சி கமிஷனர் அறிவுரை
பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களுக்கு ஆழியாறு, பாலாறு சங்கமிக்கும் இடமான அம்பராம்பாளையம் தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, சுத்திகரித்து வினியோகம் செய்யப்படுகிறது. தற்போது, கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், தண்ணீர் செந்நிறமாக வருகிறது. குடிப்பதற்கு ஏதுவாக தேவையான அளவு ஆலம் மற்றும் குளோரின் சேர்த்து சுத்திகரித்து வினியோகிக்கப்படுகிறது. எனினும், பொதுமக்கள் அனைவரும் குடிநீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும். நீரில் செம்மண் கலந்து வருவதால், வடிகட்டுவதிலும், வினியோகிப்பதிலும் காலதாமதம் ஏற்படுவதால் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், என, நகராட்சி கமிஷனர் குமரன் அறிவித்துள்ளார்.