| ADDED : நவ 27, 2025 02:34 AM
ஒண்டிப்புதூர்: ஒண்டிப்புதுார், நஞ்சப்ப செட்டியார் வீதியை சேர்ந்த பிரணவ்,17. சரவணம்பட்டி பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதற்கு முன், ஒண்டிப்புதுார் பள்ளியில், 10ம் வகுப்பு படித்த போது, இவரையும் நண்பன் ஜெகதீஸ்வரன் என்பவரையும், ஒரு மாணவி கிண்டல் செய்திருக்கிறார். ஜெகதீஸ்வரன் அந்த மாணவியை கீழே தள்ளிவிட்டுள்ளார். அதே பள்ளியில் படித்த மாணவியின் அண்ணன், பிரணவையும் ஜெகதீஸ்வரனையும் தாக்கினார். அதிலிருந்து அவர்களுக்கிடையே, முன் விரோதம் இருந்து வந்துள்ளது. 10ம் வகுப்பு முடித்து, சரவணம்பட்டி பள்ளியில் பிரணவ் சேர்ந்துள்ளார். அதன்பிறகும், மாணவியின் அண்ணன் அவரிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். கடந்த ஆண்டு பிப்.17ம் தேதி, ஒண்டிப்புதுார் பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருந்த பிரணவை மடக்கி, மிளகாய் பொடி துாவி, அரிவாளால் வெட்டி கொன்றார். கொலையாளியை சிங்காநல்லுார் போலீசார் கைது செய்தனர். 17 வயதாகும் அவர் மீது, சிறார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். மாஜிஸ்திரேட் அருண்குமார் விசாரித்தார். கொலை செய்த மாணவனுக்கு, 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நேற்று தீர்ப்பு கூறினார்.