சாலை சந்திப்பு, திருப்பங்களில் பஸ் ஸ்டாப்; இடமாற்றம் செய்ய வலியுறுத்தல்
பொள்ளாச்சி ; பொள்ளாச்சியில், திருப்பம் மற்றும் சாலை சந்திப்பு பகுதிகளில் அமைந்துள்ள பஸ் ஸ்டாப்புகளை இடமாற்றம் செய்து, போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.பொள்ளாச்சிக்கு தொழில் நிமித்தமாக பலரும், நகருக்கு வந்து செல்வதால், அதிகப்படியான வாகன போக்குவரத்து உள்ளது. நாளுக்கு நாள் பெருகும் வாகனங்களால், முக்கிய சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.இதுஒருபுறமிருக்க, நகரின், பிரதான வழித்தடத்தில், திருப்பம் மற்றும் சாலை சந்திப்பு பகுதிகளில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில், பஸ்கள் நிறுத்தப்பட்டு, பயணியரை ஏற்றி, இறக்கி விடும் போது, பின்னால் செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நிற்க வேண்டியுள்ளது. ரோட்டை மறித்து நிறுத்தப்படும் பஸ்களால், அவசரமாக செல்லும் பிற வாகன ஓட்டுநர்களும் பாதிக்கின்றனர்.வாகன ஓட்டுநர்கள் கூறியதாவது:பொள்ளாச்சி பழைய மற்றும் புது பஸ் ஸ்டாண்ட்களில் இருந்து, அதிகப்படியான அரசு மற்றும் தனியார் டவுன் பஸ்கள், மினி பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த பஸ்கள் ஒவ்வொன்றும் அந்தந்த பஸ் ஸ்டாப்களில் நின்று செல்கின்றன.ஆனால், சாலை சந்திப்பு மற்றும் திருப்பங்களில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ளதால், காலை மற்றும் மாலை நேரத்தில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இங்கு திடீரென நிறுத்தப்படும் பஸ்களால் விபத்தும் ஏற்படுகிறது.பெரும்பாலான ஸ்டாப்களில், பயணியர் நிழற்கூரையும் கிடையாது. போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் பஸ் ஸ்டாப்களை, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் மாற்றியமைக்க வேண்டும். இதற்கு, போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.