ரூட் மாறிச் செல்லும் பஸ்கள் :அவஸ்தைப்படும் பயணிகள்
கோவை: கோவையில் வழக்கமான வழித்தடத்தை மாற்றி, வேறு பாதையில் டவுன் பஸ்கள் செல்வதால், பயணிகள் அவதிப்படுகின்றனர். உதாரணத்துக்கு, கோவை மேட்டு ப்பாளையம் ரோட்டில் சாயிபாபா கோயில் முதல் பஸ் ஸ்டாண்ட் வரை, மேம்பாலம் கட்டுமான பணி நடந்து வருகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3a87dbkc&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அதனால், அவிநாசிலிங்கம் பல்கலை வழியாக, பாரதி பார்க் ரோட்டில் சென்று தடாகம் ரோட்டில் பயணித்து, இடையர்பாளையம் சந்திப்புக்கு சென்று, மீண்டும் கவுண்டம்பாளையம் நோக்கி பஸ்கள் வருகின்றன. இதன் காரணமாக, டி.வி.எஸ்.நகர், சாயிபாபா கோயில் மற்றும் எருக்கம்பெனி ஆகிய மூன்று ஸ்டாப்களுக்கு பஸ்கள் செல்வதில்லை. தடாகம் ரோடு வழியாக சுற்றி வரும் பஸ்கள் கவுண்டம்பாளையத்தில், பயணிகளை இறக்கி விடுகின்றன. அங்கிருந்து நடந்தோ அல்லது ஆட்டோக்களிலோ வர வேண்டியிருக்கிறது. பயணிகளுக்கு ஏற்படும் அசவுகரியத்தை கருத்தில் கொண்டு, பாலம் பணிகளை வேகப்படுத்த வேண்டும். பஸ் போக்குவரத்து அவசியம் என்பதால், மேட்டுப்பாளையம் ரோட்டில் செல்வதற்கான வசதியை ஏற்படுத்திக் கொடுக்க, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்காக, பஸ் வழித்தடத்தை தங்கள் இஷ்டத்துக்கு போலீசார் மாற்றியிருப்பதால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர். பயணிகளுக்காகவே பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, பாதிப்பு ஏற்படாத வகையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமென, மக்கள் நினைக்கின்றனர்.
சுந்தராபுரம் சந்திப்பில்...
சுந்தராபுரம் சந்திப்பில் இருந்து, மதுக்கரை மார்க்கெட் ரோட்டுக்கு செல்ல முடியாமல் டிவைடர் வைத்து மறித்திருப்பதால், எல்.ஐ.சி. சந்திப்பு சென்று குறிச்சி ஹவுசிங் யூனிட் வழியாக காமராஜ் நகர் அருகே உள்ள சந்திப்புக்கு பஸ்கள் வருகின்றன. இதனால், அரவான் மேடை ஸ்டாப், அபிராமி ஹாஸ்பிடல் ஸ்டாப், காமராஜ் நகர் ஸ்டாப்களுக்கு பஸ்கள் வர முடிவதில்லை என்பதால், பயணிகள் பாதிக்கப்படுகின்றனர்.
நஞ்சப்பா ரோட்டில்...
உப்பிலிபாளையம் அவிநாசி ரோடு பழைய மேம்பாலத்தில், மில் ரோட்டில் இருந்து வரும் பஸ்கள் இடதுபுறம் திரும்பி, நஞ்சப்பா ரோடு வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும். சர்ச் முன் ஸ்டாப் இருக்கிறது. இடதுபுறம் திரும்ப முடியாதவாறு டிவைடர் வைத்திருப்பதால், எல்.ஐ.சி. சிக்னல் சென்று, இடது புறம் திரும்பி, ஜெயில் ரோடு வழியாக செல்ல வேண்டியுள்ளது.