ஊருக்குள் வருவதை மறந்து பாலத்தில் பறக்கும் பஸ்கள்; கண்டுகொள்ளாத அதிகாரிகளால் மக்கள் அவதி
பொள்ளாச்சி: 'கோலார்பட்டி ஊருக்குள் வராமல், பாலத்திலேயே பஸ்கள் இயக்கப்படுவதால் சிரமமாக உள்ளது,' என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் மனு கொடுத்தனர். பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடந்தது.கோலார்பட்டி பகுதி மக்கள் கொடுத்த மனுவில் கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில், கோலார்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இங்கு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. அரசு மருத்துவமனை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள், பள்ளி, கால்நடை பொது மருத்துவமனை, அஞ்சலகம் உள்ளிட்ட அலுவலகங்கள் செயல்படுகின்றன. அலுவலகங்களுக்கு தினமும், 500க்கும் மேற்பட்ட சுற்றுப்பகுதி மக்கள் வந்து செல்கின்றனர். அரசு பொது மருத்துவமனைக்கு, 500க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வருகின்றனர்.மேலும், சுற்றுப்பகுதி கிராமங்களான செட்டிபாளையம், தேவநல்லுார், தென்குமாரபாளையம், கள்ளிவலசு, நம்பியமுத்துார், நல்லாம்பள்ளி, சீ.மலையாண்டிப்பட்டிணம் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள், கோலார்பட்டியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர். இங்கு, 20க்கும் மேற்பட்ட தென்னை நார் ஏற்றுமதி தொழிற்சாலைகள் இயங்குகின்றன. பல்வேறு தேவைகளுக்காக பொள்ளாச்சி, உடுமலை செல்ல வேண்டியதுள்ளது. கோலார்பட்டிக்கு போதிய பஸ் வசதி இல்லாத நிலையில், தனியார் நகர பஸ்களும் வருமானம் குறைவாக இருப்பதாக கூறி சில 'டி்ரிப்'களை நிறுத்தி விடுகின்றன. தேசிய நெடுஞ்சாலை பணிகள் முடிவடைந்த நிலையில், ஊருக்குள் வராமல் புறநகர் பஸ்கள் மேம்பாலத்தில் சென்று விடுகின்றன.இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. அதே போன்று, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து வரும் பஸ்களில் கோலார்பட்டிக்கு பயணியர் ஏறினாலும் நிறுத்துவதில்லை. இதற்கு உரிய தீர்வு காண வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது. கோதவாடி ஊராட்சி முன்னாள் தலைவர் ரத்தினசாமி மற்றும் மக்கள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
கோதவாடி ஊராட்சிக்கு கடந்த, 25 ஆண்டுகளாக 'கே3' பஸ் இயக்கப்பட்டது. கடந்த, இரண்டு ஆண்டுகளாக, 'கே3' பஸ், காலை, 7:30 மணிக்கு கிணத்துக்கடவில் புறப்பட்டு கோதவாடி வழியாக நெகமம் செல்லும். மாலை, 5:30 மணிக்கு நெகமத்தில் இருந்து புறப்பட்டு கோதவாடி வழியாக கிணத்துக்கடவு வந்து சேரும். இந்த இருவேளையும் பஸ் வருவதில்லை. எனவே பழையபடி பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோதவாடி - வடசித்துார் செல்ல, காலை மற்றும் மாலை என இருவேளையும் பஸ்கள் இயக்க வேண்டும் என நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.