பணிமனையில் இருந்து வெளியேறும் பஸ்கள் பாலத்துக்கு கீழ்ப்பகுதியில் வருவதில் சிக்கல்
கோவை: கோவை - மேட்டுப்பாளையம் ரோட்டில், சாயிபாபா காலனியில் துவங்கி, பஸ் ஸ்டாண்ட் வரை, 1,140 மீட்டர் நீளத்துக்கு, தேசிய நெடுஞ்சாலைத்துறையால் மேம்பாலம் கட்டப்படுகிறது. சாயிபாபா காலனியில் 'ரேம்ப்', துாண்களுக்கு இடையே மையத்தடுப்பு அமைக்கப்படுகிறது. இடைப்பட்ட பகுதியில், நான்கு இடங்களில் 'கர்டர்கள்' வைக்க வேண்டியுள்ளது. பஸ் ஸ்டாண்ட்டுக்கு எதிரே அரசு போக்குவரத்து கழக பணிமனை மற்றும் அலுவலகம் செயல்படுகிறது. இங்கிருந்து பஸ்கள் வெளியே வரும்போது, மேம்பாலத்துக்கு கீழ் வர முடியாத நிலை உள்ளது. மேம்பாலத்துக்கு கீழ் வாகனங்கள் செல்ல வேண்டுமெனில், ஐ.ஆர்.சி., விதிமுறைப்படி, 5.5 மீட்டர் உயரத்துக்கு, மேம்பால ஓடுதளம் அமைந்திருக்கவேண்டும். அப்பகுதியில் உயரம் குறைவாக இருப்பதால், பணிமனையில் இருந்து வெளியே வரும் வாகனங்கள் மேட்டுப்பாளையம் ரோட்டில் சென்று 'யூ டேர்ன்' அடித்து, பஸ் ஸ்டாண்ட்டுக்கு வர வேண்டியுள்ளது. இப்பகுதியில், 'ரேம்ப்' கட்டினால் இன்னும் சற்றுத்துாரம் தள்ளிச் சென்று திரும்பி வர வேண்டிய சூழல் ஏற்படும். இதுதொடர்பாக, மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மாற்று ஏற்பாடாக, அரசு போக்குவரத்து கழகத்தின் சுற்றுச்சுவரை இடித்து, நுழைவாயிலை சற்றுத்தள்ளி கட்டி, பஸ்கள் வந்து செல்லும் வகையில் வழித்தடம் ஏற்படுத்திக் கொடுக்க இருப்பதாக, தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் பதிலளித்துள்ளனர். அப்பகுதியில், டிரான்ஸ்பார்மர் மற்றும் கட்டடம் இருக்கிறது. டிரான்ஸ்பார்மரை வேறிடத்துக்கு மாற்றியமைத்து, புதிதாக வழியேற்படுத்தி, சுற்றுச்சுவர் கட்டிக் கொடுக்க வேண்டும். மேம்பாலம் கட்டுவதற்கு முன்பே கள நிலவரத்தை நன்கு ஆய்வு செய்து, இரு புற வாகன போக்குவரத்தை கணக்கெடுத்து, 'ரேம்ப்' அமைவிடத்தை முடிவெடுத்திருக்க வேண்டும். ஏனெனில், உப்பிலிபாளையம் அவிநாசி ரோடு பழைய பாலத்துக்கு கீழ் போக்குவரத்து கழக பணிமனை இருக்கிறது. அங்கிருந்து வெளியேறும் பஸ்கள் எவ்வித இடையூறும் இன்றி பாலத்தின் கீழ்ப்பகுதியை பயன்படுத்தி, பஸ் ஸ்டாண்ட் வந்தடைகின்றன. அதுபோன்ற கட்டமைப்பை ஏற்படுத்த தவறியதால், தேவையற்ற செலவினமும், சிரமமும் ஏற்படுவதாக, பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.