கர்நாடக எல்லை வரை புறவழிச்சாலை; நில உரிமையாளர்களிடம் கருத்து கேட்பு
அன்னுார்; கருத்து கேட்பு கூட்டத்தில், அன்னுார் விவசாயிகள் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர். சரவணம்பட்டி அடுத்த குரும்பபாளையத்தில் துவங்கி, அன்னுார், புளியம்பட்டி, சத்தி, பண்ணாரி வழியாக கர்நாடக எல்லை வரை புறவழிச்சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த 630 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக கையகப்படுத்தப்பட உள்ள நிலத்தின் உரிமையாளர்களுக்கு 3ஏ நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து நில உரிமையாளர்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நம்பியூர் மற்றும் சத்தி தாலுகா அலுவலகங்களில் நேற்று நடந்தது. இதில் அன்னுார், கதவுகரை, கெம்ப நாயக்கன் பாளையம் விவசாயிகள் பங்கேற்றனர். இதில் கோவை மாவட்ட விவசாயிகள் சார்பில் பேசுகையில், 'இந்த புறவழிச் சாலையால் பயன் இல்லை. இதனால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். சுற்றுச்சூழல் துறையின் முழுமையான அனுமதி பெறப்படவில்லை. ஏற்கனவே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் போதுமான அகலம் உள்ளது. தேவைப்படும் இடத்தில் மேம்பாலம் அமைக்கலாம். இந்தத் திட்டம் குறித்து எங்களது கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அதிகாரப்பூர்வ பதில் தேவை,' என்றனர்.கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள் 'இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு உங்களது கருத்துக்கள் தெரிவிக்கப்படும்,' என்றனர்.அடுத்த கட்டமாக கோவை மாவட்டத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.