பாதாள சாக்கடை இணைப்பு கொடுப்பதற்கான ஒப்பந்தம் ரத்து! காலதாமதம் செய்ததால் நகராட்சி நடவடிக்கை
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு கொடுப்பதில் காலதாமதம் உள்ளிட்ட காரணங்களினால், ஒப்பந்தம் ரத்து செய்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை திட்டம், 170.22 கோடி ரூபாயில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம், ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 7,400 ஆள் இறங்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. மரப்பேட்டை பள்ளம், மாட்டு சந்தை, ராஜாராமன் லே -- அவுட்டில் கழிவுநீர் உந்து நிலையங்களும், 18 இடங்களில் கழிவுநீரேற்று நிலையங்களும் அமைக்கப்பட்டன.மாட்டு சந்தையில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 11.25 மில்லியன் லிட்டர் நாளொன்றுக்கு சுத்திகரிப்பு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் வீட்டு இணைப்புகள் வழங்கப்பட வேண்டும் என திட்டமிட்டு பணிகள் துவங்கப்பட்டன. நகராட்சி ஒப்பந்தம் விடப்பட்டு, வீட்டு இணைப்பு பணிகள் துவங்கப்பட்டன.ஆனால், இத்திட்டம் துவங்கியது முதல், வீட்டு இணைப்பு வழங்குதல் வரை அனைத்திலும் பிரச்னைகள் ஏராளமாக உள்ளன.அதில், வீட்டு இணைப்புக்கு அதிகப்பட்சமாக பணம் வசூலிப்பதாகவும், முறையாக பணிகளை மேற்கொள்ளவில்லை என குற்றச்சாட்டுகள் கூறப்பட்டு வந்தன. இணைப்புக்கு எவ்வளவு பணம் வழங்க வேண்டுமென வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.அதிகளவு பணம் கேட்பதால், பலரும் இணைப்பு பெற தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில், பணிகள் தாமதம் போன்ற காரணங்களால், வீட்டு இணைப்பு பெறுவதற்காக டெண்டர் எடுத்தவரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:கடந்த, 2018 - 19ம் ஆண்டு, 13.62 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் வீட்டு இணைப்பு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. கடந்த, 2018 மே 23ம் தேதி பணி ஆணை வழங்கப்பட்டது.மொத்தம், 20 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். அதில், வீட்டு இணைப்புகள் குறிப்பிட்ட துாரத்துக்கு இலவசமாகவும், கழிப்பிடத்துக்கும், ஆள் இறங்கும் குழிக்கும் உள்ள துாரத்தை கணக்கீட்டு அதற்கேற்ப வீடுகளுக்கு இணைப்பு கட்டணம் வசூலிக்க அறிவுறுத்தப்பட்டது. கடந்த, ஐந்தாண்டுகளில், 6,628 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டது.இன்னும், 13,372 இணைப்புகள் வழங்கப்பட வேண்டும். பலமுறை நோட்டீஸ் கொடுத்தும் பணிகளை வேகப்படுத்தாமல் தாமதப்படுத்தினர். வீட்டு இணைப்புக்கு அதிக பணம் வசூலிப்பு போன்ற பல்வேறு புகார்கள் வந்தன.இது குறித்து நகராட்சி கமிஷனர் ஆய்வு செய்து விபரங்களை கேட்டறிந்து, இறுதி கட்ட அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால், இணைப்புகள் வழங்க தாமதமானது. இதனால், ஒப்பந்தத்தை ரத்து செய்ய கமிஷனர் உத்தரவிட்டார்.தற்போது, ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு புதிய ஒப்பந்தம் போடப்பட்டு பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டது. இதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.இவ்வாறு, கூறினர்.