உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; மாவட்ட இணை இயக்குனர் தகவல்

புற்றுநோய் பாதிப்பு அதிகரிப்பு; மாவட்ட இணை இயக்குனர் தகவல்

அன்னுார்; 'புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது' என நலப்பணிகள் இணை இயக்குனர் அன்னுாரில் தெரிவித்தார். அன்னுார் அரசு மருத்துவமனையில், தினமும் 450க்கும் மேற்பட்ட வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். 60 பேர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.இங்கு கோவை மாவட்ட சுகாதார நலப் பணிகள் இணை இயக்குனர் சுமதி நேற்று ஆய்வு செய்தார். நோயாளிகளிடம் குறைகள் கேட்டார். 'காயத்துக்கு கட்டு போடும் இடத்தில் கட்டு போடுவதற்கு போதுமான உதவியாளர்கள் இல்லாததால், மணி கணக்கில் காத்திருக்க வேண்டி உள்ளது,' என நோயாளிகள் புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுக்கும்படி செவிலியர் கண்காணிப்பாளர் கோமதியிடம் அறிவுறுத்தினார். பின்னர் இணை இயக்குனர் சுமதி கூறுகையில், வழக்கமாக அரசு மருத்துவமனையில் மட்டும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டு வந்தது. தற்போது புற்றுநோய் பாதிப்பு அதிகரித்துள்ளது. எனவே, ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் புற்றுநோய் பரிசோதனை செய்யப்படுகிறது.வாய் புற்றுநோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகிய மூன்று வகையான புற்று நோய்களுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.ஆரம்ப அறிகுறிகள் தென்பட்டால் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர். பெண்கள் தங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்,'' என்றார்.ஆய்வில் டாக்டர்கள் லட்சுமண குமார், கமருன்னிஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ