மாநகராட்சியிடம் இழப்பீடு கேட்டு தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
கோவை: கோவை மாநகராட்சி, ஏழாவது வார்டில், 3.22 ஏக்கருக்கு நகர ஊரமைப்பு துறையில் அனுமதி பெறப்பட்டு, 31 மனைகளுடன், 2011ல் ஜி.டி.நாயுடு லே-அவுட் உருவாக்கப்பட்டது. பொது ஒதுக்கீடாக குழந்தைகள் விளையாட 25 சென்ட், கடைக்காக 4 சென்ட் ஒதுக்கப்பட்டது. விளையாட்டு மைதானத்துக்கு ஒதுக்கிய இடம் நான்கு பேருக்கு கை மாறி, ஐந்தாவது நபருக்கு 2023ல் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டிருக்கிறது. காந்திபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கிரையம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை ஐகோர்ட்டில் நடந்த வழக்கில், மாநகராட்சிக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததால், கிழக்கு மண்டல அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, ஆவணங்களை சரிபார்த்து ஆக்கிரமிப்பை உறுதி செய்தனர். ஆக்கிரமிப்பாளருக்கு நோட்டீஸ் வினியோகித்து, அவ்விடத்தில், 5,000 சதுரடியில் கட்டப்பட்டு இருந்த கட்டடங்கள் இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டன. ஆக்கிரமிப்பாளர் பெயரில் இருந்த சொத்து வரி, குடிநீர் இணைப்பு ரத்து செய்யப்பட்டது. பட்டாவும் ரத்து செய்யப்பட்டு, மாநகராட்சி கமிஷனர் பெயருக்கு மாற்றப்பட்டது. இச்சூழலில், ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடு மற்றும் 25 சென்ட் இடத்தை திரும்ப ஒப்படைக்கக்கோரி, சென்னை ஐகோர்ட்டில் ஆக்கிரமிப்பாளர்கள் தரப்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரித்த நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.