டவர் லொக்கேஷனை பகிர்ந்த எஸ்.ஐ., மீது வழக்கு
கோவை; சட்ட விரோதமாக, 'டவர் லொக்கேஷனை' எடுத்து, மோசடி நபர்களுக்கு பகிர்ந்ததாக கோவையில் பணியாற்றிய எஸ்.ஐ., மீது, போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நீலகிரி மாவட்ட போலீசை சேர்ந்தவர் எஸ்.ஐ., மணிதுரை. இவர் கோவை தீவிரவாத தடுப்பு பிரிவில் பணியாற்றி வந்தார். அ.தி.மு.க., நிர்வாகிகள் பிரசாத், 33, அஜய் வாண்டையார் மற்றும் சிலர் சேர்ந்து தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறித்ததாக சென்னை, நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்கள், தொழிலதிபர்கள் இருக்கும் இடங்கள் குறித்து தெரிந்து கொள்ள, ஆயுதப்படை போலீஸ் செந்தில் குமார் உதவியதாக, அவரும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் விசாரித்த போது, சட்ட விரோதமாக 'டவர் லொக்கேஷனை' எடுத்து அனுப்பியதில் கோவையில் பணியாற்றிய எஸ்.ஐ., மணிதுரைக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்த தகவல் அறிந்த, கோவை தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள், மணிதுரையை தீவிரவாத தடுப்பு பிரிவில் இருந்து நீக்கி, நீலகிரி மாவட்டத்துக்கு அனுப்பினர். தற்போது, நீலகிரி மாவட்டத்தில் எஸ்.ஐ.,யாக இருக்கும் மணிதுரையை, நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர், டவர் லொக்கேஷன் எடுத்து கொடுத்தது உறுதியானதையடுத்து, போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.