29ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம்
அன்னுார்: 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 29ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்துவதாக ஊரக வளர்ச்சித் துறை சங்க நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கை: தூய்மை காவலர்களின் மாத சம்பளத்தை 10 ஆயிரமாக உயர்த்தி ஊராட்சி வாயிலாக சம்பளம் வழங்க வேண்டும், மக்கள் நல பணியாளர்களுக்கு காலமுறை சம்பளம் நிர்ணயித்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மேல்நிலை நீர் தேக்க தொட்டி இயக்குவோருக்கு 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களை தமிழக அரசின் பென்ஷன் திட்டத்தில் இணைத்து பதிவறை எழுத்தருக்கான சலுகைகள் வழங்க வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு தேர்வுநிலை, சிறப்பு நிலை, தேக்க நிலை சம்பளம் வழங்க வேண்டும். ஊராட்சி கணினி உதவியாளர்களுக்கு 20,000 ரூபாய் சம்பளம் வழங்க வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 29ம் தேதி ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து மறியல் போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் பிறகும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் நவ. 24ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும். இவ்வாறு அறிக்கை யில் தெரிவித்துள்ளனர்.