உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி போடும் பணி துவக்கம்

மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி போடும் பணி துவக்கம்

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் மாடுகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியது.தமிழகம் முழுவதும் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. இத்திட்டத்தில் அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக்கு தடுப்பூசி போடப்பட உள்ளது.கோவை மாவட்டத்தில், 2.34 லட்சம் மாடுகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் நேற்று முன்தினம் துவங்கி தொடர்ந்து, 21 நாட்கள் நடக்கிறது. தடுப்பூசி பணிக்காக, 114 குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தவறாது தங்களின் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என, கால்நடை பராமரிப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.கோமாரி நோய் காரணமாக மாடுகளின் இறப்புகள் குறைவாக இருந்தாலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி குறைவு, எருதுகளின் வேலைத்திறன் குறைவு, கறவை மாடுகளின் சினை பிடிப்பு தடைபடுவது, இளம் கன்றுகளின் இறப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் தங்களின் பசுக்கள் எருதுகள் மற்றும், 4 மாதத்திற்கு மேற்பட்ட இளம் கன்றுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என, கால்நடை பராமரிப்பு துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் தடுப்பூசி போடும் பணியை கால்நடை துறையினர் துவக்கியுள்ளனர். இவர்கள் கால்நடை வளர்ப்போர் வசதிக்காக கால்நடை உள்ள இடங்களுக்கு நேரடியாக சென்று, தடுப்பூசியை செலுத்தும் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து விவசாயி விஜய கணபதி கூறுகையில், ''கால்நடை பராமரிப்பு துறையில் புதிய நபர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். தற்போது கோமாரி நோய் தடுப்பு ஊசி செலுத்த கால்நடை பராமரிப்பு துறையினர், அந்தந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து, குறிப்பிட்ட நேரத்தில் வந்து விடுகின்றனர். இதனால் கருவூட்டல் உள்ளிட்ட வழக்கமான சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்துக் கொண்டு வரும் நபர்கள், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இதை தவிர்க்க கூடுதல் மருத்துவர் மற்றும் உதவியாளரை கால்நடை மருத்துவமனையில் நியமனம் செய்ய அரசு முன்வர வேண்டும்'' என்றார். கறவை மாடு வளர்ப்போருக்கு கால்நடைத்துறை அறிவுரை:அன்னுார் பேரூராட்சியில், செல்லனுாரில் நடந்த முகாமில் 100 மாடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.முகாமில் டாக்டர் சரவணன் பேசுகையில், ''கோமாரி நோய் தடுப்பு ஊசியை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாடுகளுக்கு போட வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்க மருந்து தர வேண்டும்.மாட்டு தொழுவத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும். கறவை மாட்டில் பால் கறக்கும் போது கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். கறவை மாட்டின் மடியை கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாட்டை கறந்த பின்பும் கைகளை கழுவிய பின்பு அடுத்த மாட்டின் மடியில் கறக்க வேண்டும்,'' என்றார்.'பேரூராட்சியில், தினமும் 100 மாடுகளுக்கு என 12 நாட்கள் முகாம் நடைபெறும்,' என கால்நடை துறையினர் தெரிவித்தனர்.இதேபோல், கணேசபுரம், பொன்னே கவுண்டன்புதுார், எல்.கோவில் பாளையம், பொகலுார், அல்லப்பாளையம் கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசி முகாம் நேற்று துவங்கியது.'கால்நடை வளர்ப்போர், அருகிலுள்ள கால்நடை மருந்தகங்களில் தங்களது மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளலாம்,' என கால்நடை பராமரிப்பு துறையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை