காவேரி கூக்குரல் இயக்கத்தினர் மரக்கன்று நடவு
பொள்ளாச்சி; மரங்களுக்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த மரம் தங்கசாமியின் நினைவு தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல்பாளையத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த மரம் தங்கசாமி, 'வாழ்வோம் மரங்களுடன்' என்ற தாரக மந்திரத்துடன் டிம்பர் மர சாகுபடியை விவசாயிகளிடம் பிரபலப்படுத்தியவர். புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளிடம் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்து மாவட்டத்தையே பசுமையாக மாற்றியவர். அவர், காவேரி கூக்குரல் இயக்கத்தின் தொடக்க கால இயக்கமான ஈஷா பசுமை கரங்கள் திட்டத்துடன் இணைந்து செயல்புரிந்தவர். இந்நிலையில், அவரின் சேவையை நினைவு கூறும் விதமாகவும், அவரின் நினைவு நாளில் விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை காவேரி கூக்குரல் இயக்கம் ஆண்டுதோறும் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இந்தாண்டு, தமிழ்நாடு முழுவதும், 1.21 கோடி மரக்கன்றுகளை விவசாயிகள் வாயிலாக நடவு செய்ய திட்டமிட்டு, இதுவரை, 44.99 லட்சம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது. நேற்று, பொள்ளாச்சி அருகே நாட்டுக்கல்பாளையத்தில், மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. காவேரி கூக்குரல் இயக்கத்தினர் கூறியதாவது: டிம்பர் மரங்கள், 3 முதல் 5 வருடங்கள் வளர்ந்த பின், கரிமுண்டா மற்றும் பன்னியூர் மிளகு ரகங்களை ஊடுபயிராக வளர்ப்பதால் தொடர் வருமானம் பெறமுடியும். விவசாயிகளுக்கு ஊடுபயிர் சாகுபடி, உணவுக்காடு வளர்ப்பு, பழங்கள் மதிப்புக் கூட்டுதல், ஜாதிக்காய் மற்றும் நறுமணப்பயிர் சாகுபடி குறித்த பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. ஈஷா நாற்றுப்பண்ணைகளில் விவசாயிகளுக்கு, 5 ரூபாய்க்கு டிம்பர் மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. மரக்கன்றுகளை பெறவும், காவேரி கூக்குரல் வாயிலாக நடத்தப்படும் பயிற்சியில் பங்கேற்க, 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.