உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குற்ற செயல்களை கண்டறிய 600 இடங்களில் சிசிடிவி கேமராக்கள்

குற்ற செயல்களை கண்டறிய 600 இடங்களில் சிசிடிவி கேமராக்கள்

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், 600 இடங்களில் குற்ற நடவடிக்கைகளை கண்டறிய 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.தமிழகம் முழுவதும் குற்ற சம்பவங்களை, உடனடியாக கண்டறிவதில், மொபைல் போன் மற்றும் சிசிடிவி கேமராக்கள் முக்கிய பங்காற்றுகின்றன.குறிப்பாக, பொது இடங்களில் நடக்கும் குற்றங்களை கண்டறிந்து, குற்றம் செய்த நபரை கையும், களவுமாக பிடித்து, கோர்ட்டில் ஆஜர் படுத்தி தண்டனை பெற்று தருவதில், சிசிடிவி கேமராக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. இதே போல திருட்டு சம்பவங்களை கண்டறியவும், திருடர்களை அடையாளம் காணவும், சிசிடிவி கேமராக்களின் பயன்கள் மகத்தானது. இவற்றின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு கடந்த, 2017ம் ஆண்டு ஜன., 9ம் தேதி டி.ஜி.பி., அலுவலகம் குறிப்பானை பிறப்பித்தது.அதில், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் 'சிசிடிவி' கேமரா பொருத்த வேண்டும் என, அதில் தெரிவித்து இருந்தது. இது பல இடங்களில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கூறுகையில்,'பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் இதுவரை, 600 இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில், மேலும்,100 கேமராக்கள் பொருத்தப்பட்டுவிடும். குறிப்பாக, குடியிருப்பு பகுதிகளில் கேமராக்களை பொருத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கான செலவு தொகை சிக்கலாக உள்ளது. ஒரு இடத்தில் கேமரா மற்றும் அது தொடர்பான சாதனங்களை நிறுவ கேமராக்களின் எண்ணிக்கையை பொறுத்து, குறைந்தபட்சம், 30 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது.இதை அந்தந்த பகுதியில் உள்ள குடியிருப்போர் நல சங்கம் மற்றும் பல்வேறு சமூக நல அமைப்புகளிடமிருந்து பெற வேண்டி உள்ளது. இதனால், சிசிடிவி கேமராக்கள் அனைத்து இடங்களிலும், பொருத்துவதில் தாமதம் ஏற்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை