நீர் பாய்ச்சும் நேரத்தை பகலுக்கு மாற்றுங்கள்!
பொள்ளாச்சி; 'விவசாயிகள் பயிர்களுக்கான நீர் பாய்ச்சும் நேரத்தை பகலுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்,' என, கோவை தெற்கு மின்பகிர்மான வட்ட மேற்பார்வையாளர் தெரிவித்தார்.கோவை மாவட்டத்தில், விவசாய விளைநிலங்களில், சோலார் மோட்டார் கட்டமைப்புகளை விவசாயிகள் ஏற்படுத்தி வருகின்றனர். இதற்கு, அரசு சார்பில் மானியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில், சோலார் திட்டத்தை பயன்படுத்த விவசாயிகள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.கோவை தெற்கு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுப்ரமணியம் அறிக்கை வருமாறு: கோவை பகிர்மான வட்டம், தெற்கு வட்டத்துக்கு உட்பட்ட விவசாயிகள் அனைவரும் பயிர்களுக்கான நீர் பாய்ச்சும் நேரத்தை பகல் நேரத்தில் மாற்றி கொள்ள வேண்டும். பகலில் இலவசமாக கிடைக்கும் புதுப்பிக்கக்கூடிய இயற்கை வளமான சூரிய மின் ஆற்றலை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்தலாம்.இதன் வாயிலாக, பசுமை ஆற்றல் திட்டங்களை ஊக்குவிப்பதோடு, மற்ற வளங்களை கொண்டு மின்னாற்றலை தயாரிக்கும் போது ஏற்படும் மாசுபாட்டின் அளவை குறைத்திட உதவும்.நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதையில் முன்னேற்றிடும் நோக்கில், பகலில் அதிகளவில் தயாரிக்கப்படும் சூரிய ஒளி மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்த அனைத்து விவசாயிகளும், விவசாய மின்மோட்டார்களை பகல் நேரங்களில் உபயோகப்படுத்த வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.