பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்; போக்குவரத்தில் மாற்றம்
தொண்டாமுத்தூர்; பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேரோட்டம் இன்று நடப்பதால், போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்தாண்டு, பங்குனி உத்திர தேர்த்திருவிழா, கடந்த, 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும், யாகசாலை பூஜையும், திருவீதி உலாவும் நடந்து வந்தது.நேற்றிரவு, திருக்கல்யாண உற்சவம், வெள்ளை யானை சேவை நடந்தது. ஏழாம் நாளான இன்று, காலை, 8:30 மணிக்கு, பஞ்சமூர்த்திகள் திருத்தேரில் எழுந்தருளுகின்றனர்.தொடர்ந்து, மாலை, 4:35க்கு, தேரோட்டம் நடக்கிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். போக்குவரத்தில் மாற்றம்
பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரோட்டத்தையொட்டி, இன்று பகல், 2:00 மணி முதல் கோவை மாநகரிலிருந்து, சிறுவாணி மெயின் ரோட்டில் வரும் வாகனங்கள், செல்வபுரம், சுண்டக்காமுத்தூர், ராமசெட்டிபாளையம், ஆறுமுககவுண்டனூர், பேரூர் செட்டிபாளையம் வழியாக, சிறுவாணி மெயின் ரோட்டை அடைந்து செல்லலாம். அதே போல, சிறுவாணி மெயின் ரோட்டில் இருந்து, மாநகர் நோக்கி செல்லும் வாகனங்கள், பேரூர் செட்டிபாளையம், ஆறுமுககவுண்டனூர், ராமசெட்டிபாளையம், சுண்டக்காமுத்தூர், புட்டுவிக்கி ரோடு வழியாக செல்லலாம் என, போலீசார் தெரிவித்துள்ளனர்.