உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; முன்பதிவு செய்ய எஸ்.டி.ஏ.டி., அழைப்பு

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; முன்பதிவு செய்ய எஸ்.டி.ஏ.டி., அழைப்பு

கோவை; 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வரும் ஆக., 16ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, எஸ்.டி.ஏ.டி., தெரிவித்துள்ளது. 'முதல்வர் கோப்பை' விளையாட்டு போட்டிகள் ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வீரர், வீராங்கனைகள் ஊக்குவிக்கப்படுகின்றனர். இந்தாண்டு, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள் உட்பட ஐந்து பிரிவுகளில், 37 விளையாட்டுகள் மாவட்ட, மண்டல அளவில் நடைபெற உள்ளது. மாநில அளவில் தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய், ரூ.75 ஆயிரம், ரூ.50 ஆயிரம், குழு போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ.75 ஆயிரம், தலா ரூ.50 ஆயிரம், தலா ரூ.25 ஆயிரம் என, முதல் மூன்று பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதில், வெற்றி பெறுபவர்களுக்கு உயர் கல்வி, வேலை வாய்ப்பில் சலுகைகள் வழங்கப்படுகின்றன. பள்ளி பிரிவில் (19 வயதிற்குட்பட்டோர்) ஆறு முதல் பிளஸ்2 வரை பயில்வோர் கடந்த, 2007ம் ஆண்டு ஜன., 1ம் தேதி அன்றோ அல்லது அதன் பின்னரோ பிறந்திருக்க வேண்டும். கல்லுாரி பிரிவில்(25 வயதிற்குட்டோர்) கடந்த, 2,000ம் ஆண்டு ஜூலை, 1ம் தேதி அன்றோ அல்லது அதற்கு பின்னரோவும், பொதுப்பிரிவில்(15-35), 15 வயது எனில் கடந்த, 2010 ஜன., 1 அன்றோ அல்லது அதற்கு முன்னர் பிறந்திருக்க வேண்டும். தவிர, 35 வயது எனில் கடந்த, 1990 ஜன., 1 அன்று அல்லது அதற்கு பிறகோ பிறந்திருக்க வேண்டும். அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளும், தமிழ்நாடு அரசு ஊழியர்களான நிரந்தரப் பணியாளர்களும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவிலான இப்போட்டியில் பங்கேற்போர், http://sdat.tn.gov.in, http://cmtrophy.sdat.inஎன்ற இணையதள முகவரி வாயிலாக வரும் ஆக., 16ம் தேதி மாலை 6:00 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முன்பதிவு செய்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்(எஸ்.டி.ஏ.டி.,) தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை