உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தண்ணீர் ததும்பும் சோலையாறு அணை; 7வது முறையாக நிரம்புகிறது

தண்ணீர் ததும்பும் சோலையாறு அணை; 7வது முறையாக நிரம்புகிறது

வால்பாறை அடுத்துள்ள, சோலையாறு அணை நிரம்பும் நிலையில் உள்ளதால், பி.ஏ.பி., பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.வால்பாறையில் இந்த ஆண்டு பெய்த தென்மேற்குப்பருவ மழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை ஆறு முறை நிரம்பியது. இதனையடுத்து, சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.இதேபோல் காடம்பாறை அணை நிரம்பியதும், மேல்ஆழியாறு அணை வழியாக ஆழியாறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது.தொடர் மழையால், பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம் அணைகளும் நிரம்பின. இதனால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.இந்நிலையில், தற்போது வடகிழக்கு பருவமழை துவங்கவுள்ள நிலையில், வால்பாறையில் விடிய, விடிய பெய்த கனமழையினால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. இதனால், சோலையாறு அணை ஏழாவது முறையாக நிரம்பும் தருவாயில், தண்ணீர் ததும்புகிறது.சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை,159.83 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 701 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 282 கனஅடி வீதம் பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

போக்குவரத்து பாதிப்பு

வால்பாறையில் பெய்யும் கனமழையால், பொள்ளாச்சி ரோட்டில் கொண்டை ஊசி வளைவுகளுக்கு இடையே பல்வேறு இடங்களில், மரம் சரிந்தும், பாறைகள் உருண்டும், விழுந்தும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து சென்று, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த பாறை மற்றும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர்.

ஆனைமலை

பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்கிறது. அதில், ஆழியாறு போலீஸ் ஸ்டேஷன் அருகே மரம் ஒன்று சாலையில் விழுந்தது. அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.இது குறித்து, தகவல் அறிந்து நெடுஞ்சாலைத்துறை, வருவாய்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து மரத்தை அப்புறப்படுத்தி, சரி செய்தனர். அப்பகுதியில், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

உடுமலை

உடுமலை பகுதிகளில், வடகிழக்கு பருவமழை கடந்த ஒரு வாரமாக கனமழையாக பெய்கிறது. இதனால், குளிர் சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளதோடு, பசுமை திரும்பியுள்ளது.விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. கிராமங்களிலுள்ள குளம், குட்டைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதோடு, ஓடைகளின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளும் நிரம்பி வருகின்றன. இதனால், நிலத்தடி நீர் மட்ட ஆதாரமும் உயர்ந்துள்ளது.

பதிவான மழையளவு

நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு (மி.மீ.,):வால்பாறை - 53, சோலையாறு - 13, பரம்பிக்குளம் - 40, ஆழியாறு - 6, மேல்நீராறு - 22, கீழ்நீராறு - 11, காடம்பாறை - 14, சர்க்கார்பதி - 18, மேல்ஆழியாறு - 5, வேட்டைக்காரன்புதுார் - 8, மணக்கடவு - 9, துாணக்கடவு - 11, பெருவாரிப்பள்ளம் - 13, நவமலை - 7, பொள்ளாச்சி - 64, உடுமலை - 35, வரதராஜபுரம் -- 22, பெதப்பம்பட்டி - 10, திருமூர்த்திநகர் - 10, நல்லாறு - 2, உப்பாறு அணை - 10, அமராவதி அணை - 30, திருமூர்த்தி அணை - 10 மி.மீ., பூலாங்கிணர் - 82.4 என்ற அளவில் மழை பெய்தது. - நிருபர் குழு -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை