சிட்டி கிரைம் செய்திகள்
பாரில் தகராறு; வாலிபரை தாக்கியவர் கைது
கோவை செல்வபுரம் அமுல் நகரை சேர்ந்தவர் பாலமுருகன், 32. திருமணமாகவில்லை. வீட்டில் கவரிங் நகைகள் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். கடந்த 11ம் தேதி செல்வபுரம் பேரூர் மெயின் ரோட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றார். அங்கு மது வாங்கி விட்டு அருகே உள்ள பாருக்கு நடந்து சென்றார்.அப்போது எதிரே வந்த அப்துல் நாசர், 42 என்பவர் பாலமுருகன் மீது மோதினார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து பாலமுருகன் சுண்டக்காமுத்தூர் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அப்துல் நாசர் மீண்டும் தகராறில் ஈடுபட்டார்.தகாத வார்த்தைகளால் திட்டி, பாலமுருகனை தாக்கினார். காயமடைந்த பாலமுருகன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்த புகாரின் பேரில், செல்வபுரம் போலீசார் வழக்கு பதிந்து பாலமுருகனை தாக்கிய, செல்வபுரம் தெற்கு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த அப்துல்நாசரை சிறையில் அடைத்தனர். முதியவர் உட்பட இருவர் தற்கொலை
கோவை போத்தனூர் கார்மல் நகரை சேர்ந்தவர் ரத்தினபாண்டியன், 80. இவர் குடும்ப பிரச்னை காரணமாக நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து மயங்கினார். குடும்பத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுந்தராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.* கோவை புட்டுவிக்கி ரோடு ஆதிசக்தி நகரை சேர்ந்தவர் வடிவேல், 56; தொழிலாளி. கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். மருந்துகள் சாப்பிட்டும் குணமடையவில்லை. இதனால் மன உளைச்சலில் கடந்த, 9ம் தேதி வீட்டில் விஷம் குடித்தார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கரும்புக்கடை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.