உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு; 2 ஹோட்டல், 2 லாட்ஜ்க்கு நோட்டீஸ்

பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு; 2 ஹோட்டல், 2 லாட்ஜ்க்கு நோட்டீஸ்

கோவை; கோவை ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள இரண்டு ஹோட்டல் மற்றும் இரண்டு லாட்ஜ்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரால், பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்படுவதால், மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.கோவை பழைய மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பாதாள சாக்கடை குழாய் பதித்து, 40 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. தற்போது குடியிருப்புகள், வர்த்தக நிறுவனங்கள், ஹோட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் வணிக வளாகங்கள் பெருகி விட்டன.கழிவு நீர் குழாயில் அதிகப்படியாக வருவதால், அழுத்தம் தாங்காமல், ஏதேனும் ஒரு பகுதியில் அடிக்கடி உடைப்பு ஏற்படுகிறது. 'சூப்பர் சக்கர்' என்கிற நவீன வாகனத்தை, மாநகராட்சி நிர்வாகம் வாடகைக்கு எடுத்து, அடைப்பு நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.சில மாதங்களுக்கு முன், 83வது வார்டு கோபாலபுரம் பகுதியில் மேனுவல் பகுதியில் இருந்து பாதாள சாக்கடை கழிவு நீர் வெளியேறி, ரோட்டில் வழிந்தோடியது; துர்நாற்றம் கடுமையாக வீசியதால், அப்பகுதியை சேர்ந்தவர்கள் அவதிப்பட்டனர். அருகாமையில் ஒருங்கிணைந்த கோர்ட் வளாகம் உள்ளது.பொது சுகாதாரம் பாதிக்கப்பட்டதால், மாநகராட்சி மீது, 'லோக்அதாலத்'தில், வக்கீல் ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதைத்தொடர்ந்து, பாதாள சாக்கடை அடைப்பை நீக்கி, கழிவு நீர் ரோட்டுக்கு வராமல் நடவடிக்கை எடுத்த, மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள், அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்களை ஆய்வு செய்தனர்.ஸ்டேட் பாங்க் ரோட்டில் உள்ள இரண்டு ஹோட்டல், இரண்டு லாட்ஜ்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் நேரடியாக பாதாள சாக்கடை குழாய்க்கு வருவதை கண்டுபிடித்தனர். பாதாள சாக்கடை இணைப்பு முறையாக பெறாதது ஆய்வில் தெரியவந்ததால், ஹோட்டல் நிர்வாகங்களுக்கு மாநகராட்சியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருப்பினும், இதுவரை பாதாள சாக்கடை இணைப்பு முறையாக பெறவில்லை.இச்சூழலில் மீண்டும் கோர்ட்டில் வழக்கு விசாரணைக்கு வந்தது; பொறியியல் பிரிவு அதிகாரிகள் ஆஜராகி, விளக்கம் அளித்தனர்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பாதாள சாக்கடை இணைப்பு முறையாக கொடுக்காததால், அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது. இரண்டாவது நோட்டீஸ் அனுப்ப உள்ளோம். ஒரு லாட்ஜில் ஏகப்பட்ட ரூம்கள் இருக்கின்றன; செப்டிக் டேங்க் இல்லை. ஒரு தொட்டி கட்டி, ஹோட்டல் மற்றும் லாட்ஜ் கழிவு நீரை சேகரித்து, நேரடியாக, பாதாள சாக்கடை இணைப்பில் சேர்ப்பிக்கப்படுகிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !