தேங்காய் எண்ணெய், மிளகு விலை உயர்வு துவரம் பருப்பு, பூண்டு விலை குறைந்தது
கோவை : நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, மளிகை பொருட்கள் வரத்து துவங்கியுள்ளதால் பெரும்பாலான பொருட்களின் விலை குறைந்துள்ளது. அதே சமயம், விளைச்சல் குறைவால் தேங்காய் எண்ணெய், மிளகு போன்றவற்றின் விலை அதிகரித்து காணப்படுகிறது. பொதுவாக மளிகை பொருட்கள், காய்கறி போன்றவற்றின் விலை உயர்வு, மக்களின் பொருளாதார செயல்பாடுகளில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த டிச., ஜன., மாதம் வரை, அனைத்து மளிகை பொருட்களின் விலையும், அதிகரித்து காணப்பட்டது. தற்போது மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, மளிகை பொருட்கள் வரத்து பிப்., முதல் துவங்கியுள்ளது. வரத்து துவங்கியுள்ளதால் விலை குறைந்துள்ளது. கோவை மாவட்ட மளிகை பொருட்கள் வியாபாரிகள் சங்க தலைவர் பிரபாகர் கூறுகையில், ''வரத்து துவங்கியுள்ளதால், பெரும்பாலான பொருட்கள் விலை குறைந்து உள்ளது. விளைச்சல் குறைவால் தேங்காய், மிளகு விலை அதிகரித்துள்ளது. தேங்காய் விளைச்சல் குறைவால், தேங்காய் எண்ணெய் 290 ரூபாய்க்கு விற்கிறது. மிளகு 720 ரூபாயிலிருந்து 820 ரூபாய்க்கு அதிகரித்துள்ளது. சீரக சம்பா அரிசி கிலோ 90 லிருந்து 100 ரூபாயாக விலை அதிகரித்துள்ளது.சில்லரை விற்பனையில் இவ்விலைகள், 20 சதவீதம் அதிகம்,' என்றார்.