மகசூல் அதிகரிக்கும் தென்னை டானிக்
கோவில்பாளையம்: தோட்டக்கலை மாணவியர், காளப்பட்டியில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழக இறுதியாண்டு தோட்டக்கலை மாணவியர், கிராமிய தோட்டக்கலை பணிப்பயிற்சி மற்றும் வேளாண் விரிவாக்க கல்வியின் ஒரு பகுதியாக, காளப்பட்டியில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடத்தினர். தோட்டக்கலை மாணவியர் பேசுகையில், 'தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்திய தென்னை டானிக்கை வேர் வாயிலாக செலுத்துவதால், விளைச்சல் 20 சதவீதம் வரை அதிகரிக்கும். தென்னை மரத்துக்கு தேவையான பச்சையம் அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். குரும்பை கொட்டுவது கட்டுப்படுத்தப்படும். ஒரு லிட்டர் டானிக்கை, நான்கு லிட்டர் நீரில் கலந்து, வேர்கள் வாயிலாக, ஒரு மரத்துக்கு 200 மில்லி வீதம் செலுத்த வேண்டும்' என்றனர். மேலும், தென்னை டானிக்கை பயன்படுத்தும் முறை குறித்தும் விளக்கினர். தோட்டக்கலை மாணவியர் கவுசிகா, குமுதினி, மதுபாலா, மதுமித்ரா, நந்திதா, நவதர்ஷினி, நஸ்ரின் பானு ஆகியோர் இதில் பங்கேற்றனர்.