உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / படிக்கும் போதே தொழில்முனைவோர்  கலக்கும் கோவை கல்லுாரி மாணவி 

படிக்கும் போதே தொழில்முனைவோர்  கலக்கும் கோவை கல்லுாரி மாணவி 

'கைத்தொழில் ஒன்றை கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒப்புக்கொள்' என்பதை பள்ளிகளில் பாடமாக மட்டுமே படித்து, நாம் கடந்து இருப்போம். தேர்வுக்காகவும், கேம்பஸ் இன்டர்வியூக்காகவும் தயாரான கல்விமுறையில் சற்று ஆக்கப்பூர்வமான மாறுதல்களை காணமுடிகிறது. பள்ளி முதலே நாம் அதிகம் கேட்கும் ஒரு வார்த்தையாக, 'எண்டர்பிரனர் ஸ்கில்' உள்ளது.பல மாணவர்கள் படிக்கும்போதே தொழில்முனைவோராக கலக்கிவருகின்றனர். அதில் ஒருவர் தான் கோவை குமரகுரு கல்லுாரியை சேர்ந்த இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி சரிதா. தையல் தொழிலை கற்றுக்கொண்டு, அதையே தன் எதிர்காலமாக இலக்கு நிர்ணயித்து பயணித்து வருகிறார் சரிதா. பிளஸ்2 விடுமுறையில், பொதுபோக்கிற்காக தையல் பழகிய அவருக்கு, அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டதால், பேஷன் டெக்னாலஜி படிப்பில் சேர்ந்து திறன்களை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறார்.கல்லுாரி மாணவர்களுக்கும், அவர்களின் உறவுகளுக்கும் படிக்கும்போதே தைத்து கொடுத்து வருமானம் ஈட்டி வருகிறார். மாணவி சரிதா கூறியதாவது: அம்மாவின் கட்டாயத்தில் தான் தையல் கற்றுக்கொண்டேன். ஆனால், அதுவே என் எதிர்காலம் என நினைக்கவில்லை. அதில் ஏற்பட்ட ஆர்வத்தினால், பேஷன் டெக்னாலஜி படிப்பில் சேர்ந்தேன். படிப்பு முடித்ததும் சொந்தமாக தொழில் துவங்கவேண்டும் என்பதே இலக்கு. எங்கள் கல்லுாரியின் சீருடை தைத்து வரும்போது, விடுதி மாணவர்களுக்கு சற்று சைஸ் சரியாக இருக்காது; அவர்கள் நினைத்த நேரத்தில் வெளியில் செல்ல முடியாது என்பதால், நான் பேசி 'ஆல்டர்' செய்து கொடுத்தேன். எனது பணி திருப்தியாக இருந்ததால், சீருடை மட்டுமின்றி, வேறு எந்த துணியாக இருந்தாலும், என்னிடம் ஆல்டர் செய்ய கொடுத்தனர். பெரும்பாலும் டெய்லர்கள் புதிய துணியை தைத்து கொடுப்பதில் தான் கவனம் செலுத்துவார்கள். ஆல்டர் வேலைகளை பெரிதாக விரும்ப மாட்டார்கள். எனவே, அதை முக்கிய பணியாக எடுத்து செய்தேன். ஆல்டர் துணிகளை உடனுக்குடன் சரிசெய்து கொடுப்பேன். தொடர்ந்து, சுடிதார் தைக்கவும் பணிகள் வந்தன.தற்போது வருமானம் எனது நோக்கம் அல்ல; கல்லுாரி முடிப்பதற்குள் திறன்களை வளர்க்கவேண்டும் என, 'சாரி டிரேப்பிங்', 'ஆரி எம்பிராய்டரி' போன்றவை கூடுதல் சான்றிதழ் படிப்பதாக படிக்கிறேன். எனது தேவைக்கு நான் வருமானம் ஈட்டிக்கொள்கிறேன். எனது பணிகளை இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிடுவதால், ஆர்டர்கள் வந்துகொண்டு இருக்கிறது. படிப்பு முடிந்ததும் சொந்தமாக, 'பொட்டிக்' வைக்கவுள்ளேன். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ