கோவை : சிறுதுளி மற்றும் ராக் அமைப்புகள் இணைந்து நடத்தும் 'பசும்புலரி' திட்டத்தின் மூலம், சேரன் மாநகர் குடியிருப்பு பகுதிகளில் உள்ள ரிசர்வ் சைட்டுகளில் மரக்கன்று நடும் விழா நடந்தது.ஐ.நா. சபை 2011ம் ஆண்டை சர்வதேச வன ஆண்டாக அறிவித்ததை முன்னிட்டு, இந்த ஆண்டு முழுவதும் மரக்கன்றுகளை நட்டு, பராமரிக்கும் ஆண்டாக கொண்டாட, சிறுதுளி மற்றும் ராக் அமைப்புகள் முடிவு செய்துள்ளன. இதற்காகவே இரு அமைப்புகளும் இணைந்து 'பசும்புலரி' என்ற பசுமை திட்டத்தை துவக்கியுள்ளன. இதன் மூலம் ஓர் ஆண்டுக்குள் ஒரு லட்சம் மரக் கன்றுகளை நட்டு வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.கடந்த ஆறு மாதங்களில் இத்திட்டத்தின் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வளர்க்கப்பட்டுள்ளன.
ஒரு லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்கை எட்டத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறன.பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், கிராம பஞ்சாயத்துகள் உள்ளிட்ட இடங்கள் தேர்வு செய்யப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. கோவையின் குடியிருப்பு பகுதிகளிலுள்ள ரிசர்வ் சைட்டுக்களிலும் மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் நேற்று சேரன் மாநகர், சிவராம நகர் ஆகிய பகுதிகளில் இரண்டு ஏக்கர் பரப்புள்ள 'ரிசர்வ் சைட்' களில் 250 மரக்கன்றுகள் நடப்பட்டன.
இந்நிகழ்ச்சியில், கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி பேசுகையில், ''கோவை முழுவதும் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து ஊரையே பசுமையாக மாற்றும் பணியில் ஈடுபட்டிருப்பது பாராட்டுக்குரியது. என் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பசும்புலரி திட்டத்தை செயல்படுத்தவும், மரக்கன்றுகள் நட்டு வளர்க்கவும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க தயாராக இருக்கிறேன்'' என்றார்சிறுதுளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதாமோகன், ' ராக்' அமைப்பின் செயலாளர் ரவீந்தரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.இப்பகுதியில் நடப்பட்டுள்ள மரக்கன்றுகள் அனைத்தையும் வளர்த்து பராமரிக்கும் பொறுப்பை மகேந்திரா பம்ப்ஸ் நிறுவனம் ஏற்றுள்ளது.