உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஆடிக்குண்டம் கொடியேற்றம்

வனபத்ரகாளியம்மன் கோவிலில் இன்று ஆடிக்குண்டம் கொடியேற்றம்

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் ஆடிக்குண்டம் விழாவில், இன்று (24ம் தேதி) கொடியேற்றமும், 26ம் தேதி காலை குண்டம் இறங்குதலும் நடக்கின்றன. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் அருகேவுள்ள வனபத்ரகாளியம்மன் கோவில், மிகவும் சிறப்பு வாய்ந்த கோயிலாகும். இங்கு ஆடிக்குண்டம் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்தாண்டு கடந்த 19ம் தேதி பூச்சாட்டுடன் விழா துவங்கியது. இதில், நெல்லித்துறை மக்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர், கோவில் பூசாரிகள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்றனர். நேற்று காலை குமரகுரு சுவாமிகள் தலைமையில் அலங்கார அபிஷேக பூஜையும், தமிழ் முறையில் லட்சார்ச்சனையும் நடந்தன.

இன்று காலை 10 மணிக்கு தேக்கம்பட்டி பொது மக்கள் சார்பில் கொடியேற்றம் நடைபெறுகிறது. திங்கள்கிழமை மாலை 5 மணிக்கு பொங்கல் வைத்து குண்டம் திறப்பும், அதனை தொடர்ந்து 26ம் தேதி அதிகாலை 3 மணிக்கு பவானி ஆற்றிலிருந்து அம்மன் அழைப்பும், காலை 6 மணிக்கு குண்டம் இறங்குதலும், மதியம் 12 மணிக்கு அக்னி அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. 27ம் தேதி மாவிளக்கும், அலகு குத்தி தேர் இழுத்தல், பூ பல்லக்கில் அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 28ம் தேதி இரவு குதிரை வாகனத்தில் பரிவேட்டையும், அம்மன் திருவீதி உலாவும், வாண வேடிக்கையும் நடக்கின்றன. 29ம் தேதி மஞ்சள் நீராட்டும், 30ல் ஆடி அமாவாசை சிறப்பு பூஜைகளும், ஆக., 1ம் தேதி 108 திருவிளக்கு பூஜையும் நடைபெறுகின்றன.விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் வசந்தா, உதவி கமிஷனர் குமரேசன் மற்றும் கோவில் ஊழியர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ