கோவை : ''குழந்தைகளுக்கு உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும், மின் சிக்கனம் குறித்தும் பெற்றோர் எடுத் துரைக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக கோவை மண்டல தலைமை இன்ஜினியர் தங்கவேல் பேசினார்.குனியமுத்தூர் கோட்டத்தில் மின் இணைப்பு பெயர் மாற்றும் முகாம் நடந்தது. செயற்பொறியாளர் கிருஷ்ணன் வரவேற்றார். மேற்பார்வை பொறியாளர் (தெற்கு) அண்ணாதுரை தலைமை வகித்தார்.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக, கோவை மண்டல தலைமை இன்ஜினியர் தங்கவேல் பேசியதாவது:கோவை மண்டலத்துக்கு உட்பட்ட 19 கோட்ட அலுவலகங்களில் இதுவரை 15ல் மின் இணைப்பு பெயர் மாற்றும் முகாம் நடந்துள்ளது; மீதமுள்ள கோட் டங்களில் 15 நாட்களுக்குள் நடத்தி முடிக்கப்படும்.உலக வெப்பமயமாதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் வாரியம் சார்பில், சி.எப்.எல்., பல்புகளை பயன்படுத்தும்படி வலியுறுத்தப்பட்டு வருகிறது; இலவசமாகவும் இந்த பல்புகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன.தற்போது, இம்முகாமில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. போதுமான அளவில் மழை பொழியாததால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மின் உற்பத்தியிலும் தேக்கம் ஏற்படும் நிலை உள்ளது. சரியான அளவு மழை இருந்தால் 2000 மெகாவாட் வரை மின் உற்பத்தி செய்யலாம். மழை இல்லையென்றால், 500 - 600 மெகாவாட் வரையே உற்பத்தி செய்யமுடியும்.
தற்போது அடிக்கும் காற்றின் உதவியுடன் மின் உற்பத்தி செய்யப்பட்டு, ஓரளவு மின் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டு வருகிறது. மின் சிக்கனம் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக மாணவ, மாணவியரிடையே விழிப்புணர்வு ஏற் படுத்தப்பட்டு வருகிறது.வீட்டில் பயன்படுத்தப்படும் குண்டு பல்புகளில் 30 சதவீதம் மட்டுமே வெளிச்சம் கிடைக்கும்; 70 சதவீதம் வெப்பம் வெளிப்படுகிறது. இதை அறிந்து வீடுகளில் குண்டு பல்புகள் பயன்படுத்துவதை தவிர்த்து, அனைத்து மின் நுகர்வோரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அனைத்து பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு உலக வெப்பமயமாதலை தடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்க வேண்டும்.
மின் சிக்கனம் குறித்து விளக்க வேண்டும்.குடிநீர், எரிபொருள் மற்றும் மின் சக்தியை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும். தற்போது முகாமில் வழங்கப்படும் மரக்கன்றுகளை பெறும் பொதுமக்கள் மரக்கன்றை ஒரு ஆண்டு முறையாக பரா மரித்தால்போதும் அது தானாக வளர்ந்து போதுமான அளவுக்கு சுற்றுச்சூழலை பாதுகாக்கும்; வெப்பத்தை தணிக்கும்.இவ்வாறு, தங்கவேல் பேசினார்.குனியமுத்தூர் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மின் நுகர்வோர், தங்கள் மின் இணைப்பின் பெயர் மாற்றம் செய்ய முகாமில் பதிவு செய்தனர்.