கோவை : மூன்றாண்டுகளுக்கு முன் காணாமல் போன, பள்ளி மாணவனை மும்பையில் மீட்ட கோவை போலீசார், பெற்றோரிடம் ஒப்படைத்தனர். மீட்கப்பட்ட மகனை ஆரத்தழுவி கண்ணீரால் நனைத்த பெற்றோர், மீட்பு நடவடிக்கை மேற்கொண்ட ஐ.ஜி.,யை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.கோவை மாவட்டம், சூலூரில் உள்ள அரசூர் பகுதியில் வசிப்பவர் பழனிச்சாமி; ஒர்க்ஷாப் தொழிலாளி. இவரது மகன் தம்புராஜ் (17). கடந்த 2008ல் சூலூர் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தார். படிப்பில் அக்கறையில்லை என, தந்தை திட்டியதால் விரக்தியடைந்த தம்புராஜ், திடீரென வீட்டில் இருந்து வெளியேறி காணாமல் போனார். சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடினர்.மாணவனை கண்டுபிடிக்க முடியாததால், இவ்வழக்கின் விசாரணையை சூலூர் போலீசார், கடந்த ஆண்டு பிப்.,11ல் முடித்துகொண்டனர். இந்நிலையில், மூன்று மாதங்களுக்கு முன், தந்தை பழனிச்சாமியின் மொபைல் போன் எண்ணுக்கு ஒரு 'எஸ்.எம்.எஸ்.,' வந்தது. அதில், எவ்வித விபரமுமின்றி வெறுமனே 'தம்புராஜ்' என்ற பெயர் மட்டுமே இருந்தது. 'காணாமல் போன மகன் எப்படியும் ஓர் நாள் வீடு திரும்புவான்...' என தவமாய், தவமிருந்த பெற்றோருக்கு அந்த நம்பிக்கை துளிர்விட்டு உயிர்வந்தது. எஸ்.எம்.எஸ்., எந்த மொபைல் எண்ணில் இருந்து அனுப்பப்பட்டதோ, அந்த எண்ணில் தொடர்பு கொண்டனர்; 'ஸ்விட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பல நாட்களாக அதே நிலை தொடர்ந்ததால் மீண்டும் பதறிப்போன பெற்றோர், கோவையிலுள்ள தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி.,வன்னியபெருமாளை சந்தித்து, மகனை கண்டுபிடித்து தருமாறு கூறினர்.
அவர், மாணவனை மீட்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பொள்ளாச்சி டி.எஸ்.பி.,பாலாஜிக்கு உத்தரவிட்டார். நெகமம் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீஸ் குழுவினர், சந்தேகத்துக்குரிய அந்த மொபைல் போன் எண்ணுக்குரியவரின் முகவரியை கண்டறிந்தனர்; அது, கர்நாடக மாநிலம், மைசூரில் வசிக்கும் ஒருவரின் முகவரி. போலீசார் மைசூருக்கு விரைந்தனர்; கூடவே, பெற்றோரும் சென்றனர். ஆனால், அங்கு தம்புராஜ் இல்லை; அது, வேறு ஒருவரின் மொபைல் போன் எண்ணாக இருந்தது. அந்நபரை போலீசார் விசாரித்தபோது, காணாமல் போன தம்புராஜ், மும்பை நகரிலுள்ள தாதர் பகுதி ஓட்டலில் வேலை செய்வது தெரியவந்தது. அங்கு சென்ற போலீஸ் குழுவினர் தம்புராஜை அடையாளம் கண்டு மீட்டனர். மீட்கப்பட்ட மாணவனுடன் மேற்கு மண்டல ஐ.ஜி.,யை நேற்று சந்தித்த பெற்றோர், விழிகளில் கண்ணீர் பெருக்குடன் கைகூப்பி நன்றி தெரிவித்தனர். மாணவனை மீட்ட போலீஸ் குழுவினருக்கு வெகுமதி அளித்து ஐ.ஜி.,பாராட்டினார்.ஐ.ஜி., வன்னியபெருமாள் கூறுகையில்,''மூன்றாண்டுகளுக்கு முன் காணாமல் போன மாணவனை மீட்க, அவன் பெற்றோருக்கு அனுப்பிய 'எஸ்.எம்.எஸ்.,' பேருதவியாக அமைந்தது. மற்ற வழக்குகளை விசாரிப்பதை காட்டிலும், காணாமல் போனவரை கண்டுபிடித்து குடும்பத்தாரிடம் சேர்ப்பதன் மூலம் ஆத்ம திருப்தி கிடைக்கிறது,'' என்றார்.மீட்கப்பட்ட மாணவனின் தந்தை பழனிச்சாமி கூறுகையில், ''தம்புராஜ், எங்களுக்கு ஒரே மகன். அவனை பிரிந்த நாள் முதல் எங்களுக்கு தூக்கம், நிம்மதி இல்லாமல் போய்விட்டது. மும்பையில் அவனை தேடிக்கண்டுபிடித்தபோது, என்னையே அவன் அடையாளம் தெரியவில்லை என கூறிவிட்டான். தனது பெயர் தம்புராஜ் அல்ல டேவிட் என்றும் கூறினான்; அவன் அவ்வாறு கூற காரணம் என்ன என்று இதுவரை கேட்வில்லை. அவன் கிடைத்ததே பெரிய விஷயம்; அதனால், அவனிடம் எவ்வித கேள்வியையும் கேட்க விரும்பவில்லை,'' என்றார்.