டில்லி செல்லும் கோவை அரசுப்பள்ளி மாணவர்கள்
கோவை: தேசிய மக்கள் தொகை கல்வித் திட்டத்தின் கீழ், வளரிளம் பருவக் கல்வி தொடர்பாக 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 'பங்கேற்று நடித்தல்' (ரோல் பிளே) போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் மாநில அளவில் வெற்றி பெற்ற கோவை, காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், தேசிய அளவிலான இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். அரசுப் பள்ளிகளில் பயிலும் 9ம் வகுப்பு மாணவர்களுக்காக, இந்த 'ரோல் பிளே' போட்டிகள் முதலில் பள்ளி அளவிலும், பின்னர் மாவட்ட அளவிலும் நடைபெற்றன. ஒரு அணிக்கு 5 மாணவர்கள் இடம் பெற்றனர். பள்ளி அளவில் வென்றவர்கள், அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் நடைபெற்ற, மாவட்ட போட்டிகளில் பங்கேற்றனர். மாவட்ட அளவில் வெற்றி பெற்ற அணிகள், திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான போட்டியில் கலந்து கொண்டன. இப்போட்டியில் சென்னை, செங்கல்பட்டு, திருநெல்வேலி, திருப்பூர் உட்பட 22 மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். கோவை மாவட்டம் சார்பில் பங்கேற்ற, காந்திமாநகர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள், மாநில அளவில் வெற்றி பெற்று, தேசிய போட்டிக்குத் தகுதி பெற்றனர். இவர்கள், டில்லியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் சார்பில் நடைபெறும் இறுதி போட்டியில் பங்கேற்க உள்ளனர். 'வெற்றி பெறுவார்கள்' மாணவர்கள், 'இணையம், சாதனங்கள் மற்றும் ஊடகத்தின் பாதுகாப்பான பயன்பாடுகள்' குறித்த விழிப்புணர்வை, 5 நிமிடத்திற்கு மிகாமல் 'ரோல் பிளே' மூலம் நடித்துக் காண்பித்தனர். தமிழ் ஆசிரியை ரோஸ்லின் கிறிஸ்டல் செல்வி தலைமையில், கடந்த ஆண்டும் தேசிய அளவில் தமிழகத்தில் இருந்து எங்களது பள்ளி மாணவர்களே பங்கேற்றனர். இந்த ஆண்டு அவர்கள் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. - விஜயலஷ்மி தலைமையாசிரியை