தமிழக அரசுக்கு கோவை தொழில் அமைப்புகள் நன்றி!
கோவை; கோவை, அவிநாசி ரோட்டில் உயர்மட்ட மேம்பாலம் அமைத்ததற்காகவும், தொழில் ஊக்குவிப்பு நடவடிக்கைகளுக்காகவும் தொழில் அமைப்புகள், முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளன. ராஜேஷ் லுந்து, தலைவர், இந்திய தொழில் வர்த்தக சபை: மேம்பாலத்துக்கு, கோவையின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிய ஜி.டி.,நாயுடு பெயரைச் சூட்டி இருப்பது மிகப் பொருத்தமானது. கோவையில் தங்க நகைப் பூங்கா அமைய இருப்பது, தங்க நகைத் தொழிலில் சிறந்து விளங்கும் கோவைக்கு முக்கிய ஊக்குவிப்பாக இருக்கும். இந்த முன்னெடுப்புகளை எடுத்தமைக்காக, முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. மிதுன் ராம்தாஸ், தலைவர், சீமா: கோவை மாவட்டத்தில் உயர் தொழில்நுட்ப பம்ப் மோட்டார் உற்பத்திக்கான உயர்திறன் மையம் அமைப்பதற்கான பணிகளை துரிதப்படுத்தியமைக்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி. இதன் மொத்த மதிப்பு ரூ.14.4 கோடி. இதில், தமிழக அரசு 13 கோடி ரூபாயை தன் பங்காக வழங்குகிறது. அவிநாசி சாலையில் உயர்மட்ட மேம்பால பணிகளை நிறைவு செய்தமைக்கும், ஜி.டி. நாயுடு பெயர் சூட்டியமைக்காகவும் நன்றி. அதேசமயம், மேற்கு புறவழிச்சாலை 2ம் மற்றும் 3ம் கட்ட பணிகள், கிழக்கு புறவழிச்சாலை பணிகளையும் துரிதப்படுத்த வேண்டும். மெட்ரோ ரயில் பணிகளையும் விரைவுபடுத்த வேண்டும். தேவகுமார், தலைவர், சியா: உலக புத்தொழில் மாநாட்டை நடத்துவதற்காக, கோவை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது, மாநிலத்தின் இளம் தொழில்முனைவோர், புதுமை கண்டுபிடிப்பாளர்கள், எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும். அவிநாசி சாலை மேம்பாலத்துக்கு, கோவையின் தொழில்முன்னோடி ஜி.டி.நாயுடு பெயர் சூட்டப்பட்டுள்ளது. மெட்ரோ வழித்தடங்கள் சிறப்பாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்காக முதல்வருக்கு நன்றி. அதேபோல், அவிநாசி ரோடு, சத்தி ரோடு உள்ளிட்ட தொழில் வழித்தடங்களில் உரிய வடிகால் வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும். கோவை வடக்கு தொழில்பகுதிகளான சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, கணபதி பகுதிகளில், எம்.எஸ்.எம்.இ., தொழில் மையங்கள், இன்குபேஷன் மையங்கள், சிறிய அடுக்கு மாடி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். எம்.எஸ்.எம்.இ., நிறுவனங்களுக்கான உரிமங்கள் எளிமைப்படுத்தப்பட்டு, நில ஒதுக்கீடு சலுகைகள் வழங்க வேண்டும். இவ்வாறு, தொழில் அமைப்புகள் தெரிவித்துள்ளன.