பொள்ளாச்சி : பி.ஏ.பி., திட்டத்தின் உயிர்நாடியான காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணியை வரும் 15ம் தேதிக்குள் நிறைவு செய்து, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பி.ஏ.பி., திட்ட காண்டூர் கால்வாய், மேற்கு தொடர்ச்சி மலையில் சமமட்டமாக 49.3 கி.மீ., நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. காண்டூர் கால்வாய் பழுதடைந்துள்ளதால் திறந்து விடப்படும் தண்ணீரில் 30 சதவீதத்திற்குமேல் விரயமானது. இதனால், காண்டூர் கால்வாயை முழுமையாக புதுப்பிக்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இந்த திட்டத்தை தமிழக அரசு 184.50 கோடி ரூபாயில் மேற்கொண்டுள்ளது. இதற்கான பணி கடந்த மார்ச் முதல் தேதி துவங்கியது. மார்ச் மாதம் பணிகள் துவங்கினாலும், ஏப்., மற்றும் மே மாதங்களில் தான் பணிகள் வேகம் பிடித்தது. இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக 20 நாட்களுக்கு மேல் பணிகள் தடைபட்டுள்ளன. காண்டூர் கால்வாயில் இடைப்பட்ட பகுதிகளில் ஜூலை மாதம் இறுதிக்குள் பணிகள் நிறைவு செய்யப்பட்டு, தண்ணீர் திறக்கப்படும் என்று அதிகாரிகள் அறிவித்திருந்தனர். ஆனால், மணல் தட்டுப்பாடு, மழை காரணமாக பணிகளில் தொய்வு ஏற்பட்டு, மேற்கொண்ட பணியை நிறைவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஆக., முதல் வாரத்தில் காண்டூர் கால்வாயில் தண்ணீர் திறந்து, ஆக., 15 முதல் திருமூர்த்தி அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். பாலாறு படுகை திட்டக்குழு ஆலோசனை கூட்டத்தில் அதே கோரிக்கை முன்மொழியப்பட்டது. காண்டூர் கால்வாய் பணி முடிவதில் காலதாமதம் ஏற்படுவதால், ஆக., 15ல் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதும் கேள்விக்குறியாகியுள்ளது. பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 'மூன்று பிரிவுகளாக காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணி நடக்கிறது. மூன்று இடங்களிலும் சேர்த்து சுமார் 3 கி.மீ., தொலைவுக்கு கால்வாய் கட்டப்பட்டுள்ளது. கால்வாயில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறைவடைய இன்னும் 15 நாட்களாகும். அதனால், ஆக., 15ல் பணிகளை நிறைவு செய்து, சர்க்கார்பதியில் இருந்து தண்ணீர் திறந்து திருமூர்த்தி அணைக்கு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின், பத்து நாட்களில் திருமூர்த்தி அணையின் நீர்மட்டத்தை உயர்த்தி, ஆக., 25 முதல் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மழை தீவிரமடைந்து பணிகள் பாதிக்கப்பட்டால் சில நாட்கள் தாமதமாகும்' என்றனர்.