| ADDED : செப் 02, 2011 11:06 PM
வால்பாறை : வால்பாறையில் நேற்று இடைவிடாது பெய்த கன மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. வால்பாறையில் கடந்த இரண்டு மாதமாக தென்மேற்குப்பருவ மழை தீவிரமாக பெய்து வருகிறது. கன மழையின் காரணமாக அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான சின்னக்கல்லார், அக்காமலை, கீழ்நீராறு, கெஜமுடி உள்ளிட்ட நீர்பிடிப்பு பகுதிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையின் காரணமாக கடந்த மாதம் 4ம் தேதி இரவு 160 அடி கொள்ளவு கொண்ட சோலையாறு அணை நிரம்பியது. இதனையடுத்து சேடல் டேம் வழியாக பரம்பிக்குளத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. டவுன் பகுதியில் பெய்து வரும் கன மழையினால் பல இடங்களில் வீட்டு தடுப்புச்சுவர் இடிந்தும், நடைபாதைகள் இடிந்ததால் மக்கள் நடந்து செல்ல வழியில்லாமல் தவிக்கின்றனர்.
காற்றுடன் கன மழை பெய்துவரும் நிலையில் நடுமலை கான்கீரீவ் பால்ஸ், சோலையார் பிர்லா பால்ஸ், கருமலை இறைச்சல்பாறை, சின்னக்கல்லார் பால்ஸ் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. டவுன் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக இரவு பகலாக பெய்துவரும் கன மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. காற்றுடன் கன மழை பெய்துவருவதால் மக்கள வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் பரிதவிக்கின்றனர். தொடர் மழையின் காரணமாக பரம்பிக்குளம் பாசனத்திட்டத்தின் உயிர்நாடியாக விளங்கும் சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 163.17 அடியாக உயர்ந்தது.