கோயம்புத்துார் சகோதயா ஐவர் ஹாக்கி போட்டி ஆக்ரோஷமாக விளையாடிய இரு பாலர் அணியினர்
கோவை; காளப்பட்டி, சுகுணா பிப் பள்ளியில், 45வது கோயம்புத்துார் சகோதயா ஐவர் ஹாக்கி மற்றும் கூடைப்பந்து போட்டிகள் இரு நாட்கள் நடந்தன.கூடைப்பந்து போட்டியில், 12 வயதுக்குட்பட்ட மாணவியர் பிரிவில், 20 அணிகள் பங்கேற்றன. ஹாக்கி போட்டியில், 12, 14, 17, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், 60 அணிகள் பங்கேற்றன. சுகுணா நிறுவனங்களின் சேர்மன் லட்சுமி நாராயணசாமி, தலைவர் சுகுணா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.பல்வேறு சுற்றுக்களை அடுத்து மாணவியருக்கான கூடைப்பந்து முதல் அரையிறுதியில் சுகுணா பிப் பள்ளியும், அத்யாயனா பள்ளியும் மோதின. இதில், 22-20 என்ற புள்ளி கணக்கில் சுகுணா பிப் பள்ளி வெற்றி பெற்றது. இரண்டாம் அரையிறுதியில், சி.எஸ்., அகாடமியும், பொள்ளாச்சி ஹனி பன்ச் பள்ளியும் மோத, 13-11 என்ற புள்ளி கணக்கில் சி.எஸ்., அகாடமி வெற்றி பெற்றது.இறுதிப்போட்டியில், சி.எஸ்., அகாடமி அணி, 16-13 என்ற புள்ளி கணக்கில் சுகுணா பிப் பள்ளியை வென்றது. ஹனி பன்ச் பள்ளி, 17-3 என்ற புள்ளி கணக்கில் அத்யாயனா பள்ளியை வென்று மூன்றாம் இடம் பிடித்தது. அதேபோல், 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான ஹாக்கி இறுதிப்போட்டியில், சுகுணா சர்வதேச பள்ளி, 3-2 என்ற கோல் கணக்கில் அத்யாயனா பள்ளியை வென்று முதலிடம் பிடித்தது.தொடர்ந்து, 17 வயதுக்குட்டோர் பிரிவில், சுகுணா சர்வதேச பள்ளி, 6-0 என்ற கோல் கணக்கில் எஸ்.எஸ்.வி.எம்., வோர்ல்டு பள்ளியை வென்று முதலிடம் பிடித்தது. 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி, 6-5 என்ற கோல் கணக்கில் எஸ்.எஸ்.வி.எம்., வோர்ல்டு பள்ளியை வென்றது.மாணவியருக்கான (14 வயதுக்குட்பட்ட) ஹாக்கி இறுதி போட்டியில், அத்யாயனா பள்ளி, 3-1 என்ற கோல் கணக்கில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியை வென்றது. 17 வயதுக்குட்டோர் பிரிவில், அத்யாயனா பள்ளி, 4-0 என்ற கோல் கணக்கில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளியை வீழ்த்தியது.அதேபோல், 19 வயதுக்குட்டோர் பிரிவில், பி.எஸ்.பி.பி., பள்ளி, 4-0 என்ற கோல் கணக்கில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அணியையும், 12 வயதுக்குட்பட்டோர் பிரிவில், கோபி சாரதா சர்வதேச பள்ளி அணி, 5-0 என்ற கோல் கணக்கில் சுகுணா பிப் அணியை வென்று முதலிடம் பிடித்தது. வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.