டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் கோவை டஸ்கர் அணி அபாரம்
கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில், முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டி, எஸ்.என்.எம்.வி. மைதானத்தில் நடந்தது. கோவை டஸ்கர் மற்றும் ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரி அணிகள் மோதின. முதலில் ஆடிய கோவை டஸ்கர் அணி, 45 ஓவரில் 237 ரன் எடுத்தது. அணி வீரர்கள் விஜய் 70, சோமசுந்தரம் 34, கோகுல் மூர்த்தி 33, சல்மான் கான் 31 ரன் எடுத்தனர். ராமகிருஷ்ணா கல்லுாரி அணி வீரர் மணி சங்கர், 33 ரன் விட்டுக் கொடுத்து, மூன்று விக்கெட் எடுத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி அணி 43.1 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 185 ரன் மட்டுமே எடுத்தது. அணி வீரர் வினய் 68, விஜய் அபிமன்யு 45 ரன் எடுத்தனர். கோவை டஸ்கர் அணி வீரர்கள் கோகுல் மூர்த்தி, நான்கு மற்றும் அரவிந்த் மூன்று விக்கெட் எடுத்தனர். நான்காவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர்.ஐ.ஐ., மைதானத்தில் நடந்தது. எஸ்.ஆர்.ஐ.ஐ., மற்றும் சாம் கிரிக்கெட் அகாடமி அணிகள் மோதின. எஸ்.ஆர்.ஐ.ஐ., அணி 49.3 ஓவரில் 181 ரன் எடுத்தது. ராகுல் 58, நித்யானந்தம் 32 ரன் எடுத்தனர். சாம் கிரிக்கெட் அகாடமி வீரர்கள் சூர்ய பிரகாஷ் நான்கு, நிஷாந்த் மூன்று விக்கெட் எடுத்தனர். மழை காரணமாக, 25 ஓவரில் 91 ரன் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சாம் கிரிக்கெட் அகாடமி அணி 16.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 91 ரன் எடுத்து வென்றது. நிஷாந்த் 35 ரன், சுரேஷ் 41 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினர்.