சிறுபான்மையினர் பிரச்னைகளுக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு ஆணையத் தலைவர் பெருமிதம்
கோவை: சிறுபான்மையினர் பிரச் னைகளுக்கு அதிகாரிகள் உடனடி தீர்வு காண்பதாக சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருண் கூறினார்.சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் அருண் தலைமையிலான அனைத்து துறை அரசு அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. ஆய்வுக்கூட்டத்துக்கு பின் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கோவையில் கல்லறை தோட்டம், பள்ளிவாசல் அமைப்பதற்கு அனுமதி பெறுவதில் பல்வேறு மனுக்கள் விசாரணை என்ற பெயரில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்தன. சிறுபான்மை மக்களுக்கான பள்ளி, கல்லுாரி அனுமதி பெறுவது, அதில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களின் அனுமதி, சிறுபான்மை மக்களின் வழிபாட்டு தல பாதுகாப்பு, தடையில்லா சான்று வழங்குவது, சிறுபான்மை நிறுவனத்துக்கான அங்கீகாரம் தருவது உள்ளிட்ட பல கோரிக்கைகள் எழுப்பப்பட்டன.குறைகளையும் வேண்டுகோள்களையும் கேட்டோம், கலெக்டர் கிராந்திகுமார் தலைமையிலான அரசுத்துறை அதிகாரிகளை கொண்டு அவை உடனுக்குடன் தீர்வு காணப்பட்டன. 60 முதல் 70 சதவீத கோரிக்கைகளும் பிரச்னைகளும் உடனுக்குடன் நிறைவு செய்யப்பட்டன. கிறிஸ்தவ ஆலயங்கள் பள்ளி வாசல்களில் இறைவழிபாடு மேற்கொள்வதற்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்று கோரி மனுக்கள் வந்தன. அதன் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்வதாக போலீஸ் கமிஷனர் மற்றும் எஸ்.பி. ஆகியோர் உறுதியளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.