எலி பேடு அதிக விலைக்கு விற்றதால் இழப்பீட்டுக்கு உத்தரவு
கோவை: எலிபேடு அதிக விலைக்கு விற்றதால், வாடிக்கையாளருக்கு இழப்பீடு வழங்க, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.கோவை, சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகரில் வசித்து வருபவர் கவுதமன், கோவை அரசு கலைக்கல்லுாரி ரோட்டிலுள்ள பழமுதிர்நிலையம் டிபார்ட்மென்ட் ஸ்டோரில், 2024, மே 30 ல், 'எலி பேடு' வாங்கினார். அதன் எம்.ஆர்.பி., விலை, வரி உட்பட 100 ரூபாய் என குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஒன்றுக்கு, 116 ரூபாய் விகிதம் மூன்று எலிபேடுக்கு, 348 ரூபாய் பெற்றனர். கூடுதலாக 48 ரூபாய் வசூலித்தனர். கடை ஊழியர்களிடம் கேட்ட போது, 'வரி சேர்த்து சரியான விலைக்கு தான் விற்கப்படுகிறது. இஷ்டம் இருந்தால் வாங்கலாம்; இல்லாவிட்டால் சென்று விடுங்கள்' என்று அநாகரிகமாக பேசினர். ஸ்டோர் மேலாளரிடம் புகார் அளித்தும், உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட கவுதமன், வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.இதையடுத்து இழப்பீடு வழங்க கோரி, வக்கீல் ஏ.பி.ஜெயச்சந்திரன் வாயிலாக, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், வழக்கு தாக்கல் செய்தார். விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் பிறப்பித்த உத்தரவில், 'எதிர்மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்துள்ளதால், மனுதாரரிடம் கூடுதலாக பெற்ற 48 ரூபாயை திருப்பி கொடுப்பதோடு, மன உளைச்சலுக்கு இழப்பீடாக, 5,000 ரூபாய், வழக்கு செலவு, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளனர்.