| ADDED : நவ 18, 2025 04:36 AM
கோவை: கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான 'இக்னைட்- 2025' எனும் கலை, அறிவியல், இலக்கிய மற்றும் விளையாட்டு போட்டிகள் நடந்தன. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பில் பயிலும் மாநகராட்சி, அரசு மற்றும் மெட்ரிக் பள்ளிகளைச் சேர்ந்த 1,264 மாணவர்கள் பங்கேற்றனர். அறிவியல் கண்காட்சி, வினாடி - வினா, பேச்சு, விவாதம், கவிதை, அறிவியல் படம் வரைதல், கணினியின் மூலம் டிஜிட்டல் போஸ்டர் உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. கலை மற்றும் விளையாட்டு துறைகளில் பாட்டு, தனிநடனம், குழுநடனம், வலைப்பந்து உள்ளிட்ட போட்டிகளும் நடைபெற்றன. நிகழ்ச்சியை கல்லூரியின் செயலர் வாசுகி துவக்கி வைத்து பேசினார். போட்டிகளில் வென்ற 195 மாணவர்களுக்கு ரூ.1 லட்சத்திற்கும் அதிகமான பரிசு தொகை, பதக்கங்கள் மற்றும் கோப்பைகளும் வழங்கப்பட்டன. அரசு மற்றும் மாநகராட்சி பள்ளிகள் பிரிவில், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை மணியகாரன்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வென்றது. மெட்ரிக் பள்ளிகள் பிரிவில், பிரசன்டேஷன் கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியது.